/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதுகாப்பில்லாத அங்கன்வாடி மையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
பாதுகாப்பில்லாத அங்கன்வாடி மையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பாதுகாப்பில்லாத அங்கன்வாடி மையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பாதுகாப்பில்லாத அங்கன்வாடி மையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 20, 2024 10:16 PM

உடுமலை : வாளவாடி ஊராட்சியில் அங்கன்வாடி அமைந்துள்ள பகுதி சுகாதார சீர்கேட்டுடன், பாதுகாப்பில்லாமலும் இருப்பதால், குழந்தைகளுக்கு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாளவாடி குளத்தின் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில், பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறது. இதனால் பெற்றோரும் ஆர்வத்துடன் குழந்தைகளை அங்கு அனுப்புகின்றனர்.
ஆனால், அங்கன்வாடி அமைந்துள்ள பகுதி துாய்மையின்றி உள்ளது. வாளவாடி குளக்கரையின் நிலை ஏற்கனவே கழிவுகள் நிறைந்த பகுதியாக உள்ளது. அதன் அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தையும் சமூக விரோதிகள் விட்டு வைப்பதில்லை.
மையத்தை சுற்றிலும் கழிவுகளை கொட்டுவது மட்டுமின்றி, திறந்த வெளிக்கழிப்பிடமாகவும், மது அருந்தும் இடமாகவும் மாற்றியுள்ளனர்.
மையத்தின் பின்புறம் இதனால் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், செடிகளும் புதர்களாக வளர்ந்து விஷ ஜந்துகள் வந்தாலும், தெரியாத நிலையில் காடு போல் மாறியுள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாமல் இருப்பதுடன், மையத்தின் சூழலும் சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது.
இப்பிரச்னையை தவிர்க்க, அங்கன்வாடியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மையத்தை சுற்றிலும் துாய்மை இல்லாமல் இருப்பதால், குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பாதிப்புகளும் ஏற்படுகிறது.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் சுற்றுப்புற துாய்மையை பராமரிக்க வேண்டும்.
தற்போது மழைபொழிவும் இருப்பதால், கழிவுகள் தேங்கும் சூழலில் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் அங்கன் வாடி மையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, சுற்றுச்சுவர் அமைப்பதற்கு சமூக நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

