/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்பில் சுகாதாரகேடு! சங்கத்தினர் பொறுப்புணர்வது அவசியம்
/
வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்பில் சுகாதாரகேடு! சங்கத்தினர் பொறுப்புணர்வது அவசியம்
வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்பில் சுகாதாரகேடு! சங்கத்தினர் பொறுப்புணர்வது அவசியம்
வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்பில் சுகாதாரகேடு! சங்கத்தினர் பொறுப்புணர்வது அவசியம்
ADDED : செப் 07, 2024 11:47 PM

திருப்பூர் : திருப்பூர், வீரபாண்டியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 1,280 வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது; இங்கு, பராமரிப்பு என்பது படுமோசமாக இருக்கிறது.
குடியிருப்புவாசிகள் சிலர் கூறுகையில், 'வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் அடைப்பு ஏற்பட்டு, திறந்தவெளியில் வெளியேறுகிறது; மனிதக்கழிவுகள் கூட திறந்தவெளியில் விடப்படுகிறது.
குடியிருப்பு பகுதியில் ஆங்காங்கே குவியும் குப்பை அகற்றப்படாததால், குப்பை தேங்கி, துர்நாற்றம் வீசி, சுகாதார கேடு ஏற்படுகிறது' என்றனர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதி காரிகள் கூறியதாவது:
அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை, 'நம் குடியிருப்பு; நம் பொறுப்பு' என்பது தான் நடைமுறை. அந்த வகையில், அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் ஏற்படுத்தி, அவர்களது வாயிலாக, கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்வது, மாநகராட்சி வாயிலாக குப்பைகளை அள்ளிச் செல்ல ஏற்பாடு செய்வது, வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பணியாளர் நியமிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்பில், 5 சங்கங்கள் உள்ளன. மாதந்தோறும், குடியிருப்புவாசிகளிடம் இருந்து, 200 ரூபாய் பராமரிப்புக் கட்டணம் வசூலித்து, அதில் இருந்து தான் இத்தகைய பணிகளை செய்து கொள்ள வேண்டும்; சரியான முறையில் செயல்படும் சங்கங்களுக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது.
ஆனால், வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சங்கங்களின் செயல்பாடு திருப்தியாக இல்லை. பராமரிப்பு பணியில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு, 3,000 ரூபாய் வீட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொகை அதிகம் எனக்கூறி, வரி செலுத்த மக்கள் முன்வராமல் உள்ளனர்.
வரி செலுத்தினால் தான் மாநகராட்சி நிர்வாகத்தினரும் அவ்வப்போது குப்பை அள்ளுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். மக்களின் ஒருங்கிணைப்புடன் சங்கம் அமைத்து அதிகாரம்மிக்க ஒரு அமைப்பாகவே செயல்படும் வாய்ப்பு, அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், அதனை சரிவர பயன்படுத்திக் கொள்ளாததால், ஒட்டு மொத்த குடியிருப்புவாசிகளும் சிரமப்பட வேண்டி உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.