ADDED : மே 10, 2024 02:08 AM

திருப்பூர்;திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
வரும், 18 முதல் 22ம் தேதி வரை, தினமும், சோமாஸ்கந்தர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், திருவீதியுலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். குறிப்பாக, 21ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கருட சேவை நிகழ்ச்சியும், 22ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
வரும், 23ம் தேதி உற்சவ மூர்த்திகள் தேருக்கு எழுந்தருளுகின்றனர்; அன்று மாலை, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டமும், 24ம் தேதி மாலை, ஸ்ரீவீரராகவப்பெருமாள் தேரோட்டமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, பரிவேட்டை, தெப்பத்திருவிழா, தரிசனம், மஞ்சள்நீர், விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.
தேர்த்திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்தது. செயல் அலுவலர் சரவணபவன், அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், அறங்காவலர்கள், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், கோவில் பணியாளர் மற்றும் கட்டளைதாரர்கள், சமுதாய அமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வழக்கம் போல், தேர்த்திருவிழாவை விமரிசையாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, கோலாட்டம், கும்மியாட்டம், பெருஞ் சலங்கையாட்டம், கைலாய வாத்திய, பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில் தேரோட்ட நாட்களில் அன்னதானம் வழங்குவது என, அனைத்து விழா ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.