ADDED : ஜூலை 23, 2026 05:41 PM
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார், சேமலை கவுண்டம்பாளையத்தில் வலுப்பரம்மன் கோவில் அமைந்துள்ளது. திருப்பூரில் இருந்து தாராபுரம் ரோடு வழியாக சென்றால் 20வது கிலோ மீட்டரில் கோவில் உள்ளது. வலிப்பு நோய் மற்றும் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் நீங்க பக்தர்கள் வலுப்பூர் அம்மனை வழிபடுகின்றனர். சோழ மன்னன் விக்கிரமாதித்தன் தனது மகளின் வலிப்பு நோய் நீங்க வலுப்பூர் அம்மனை வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
வாரந்தோறும் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் அம்மனுக்கு பொங்கல் வைத்து, கருப்பராயனுக்கு கிடா வெட்டி, படையல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருமணத் தடை நீங்கவும், குழந்தை பேறு வேண்டியும் கோவில் முன் உள்ள ஆலமரத்தில் மக்கள் தொட்டில் கட்டும் வழக்கம் இன்றும் உள்ளது. தை மாதத்தில் வலுப்பூர் அம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வலுப்பூர் அம்மன் கோவில் தேரோட்டம் அருகில் உள்ள அலகுமலை கைலாசநாதர் கோவில் ரத வீதியில் நடைபெறும். இது அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேரோட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் நடக்கிறது. தை மாத தேர்த்திருவிழா, ஆடி 18, அமாவாசை, பெளர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
