UPDATED : ஜூலை 23, 2026 06:25 PM
ADDED : ஜூலை 23, 2026 06:22 PM

திருப்பூர்:திருப்பூரில் போக்குவரத்து சிக்னல்களில் தலைக்கு மேல் ஆபத்தான வகையில் தொங்கவிடப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அவற்றுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் யாருக்கு செல்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சாலையோரங்களில் விளம்பர பேனர்கள் வைப்பதற்கு நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், திருப்பூர்-தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் போக்குவரத்து சிக்னல்களில் தனியார் நிறுவனங்களின் இரும்பு மற்றும் தகர விளம்பர பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்த பலகைகள் பலத்த காற்றின்போது ஆடுவதால், அறுந்து விழுந்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு உயிராபத்து ஏற்படும் சூழல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், சிக்னல்களில் விளம்பர பலகைகளை அமைக்க எந்தத் துறையின் அனுமதி வழங்கப்படுகிறது, அதற்காக வசூலிக்கப்படும் தொகை யாரிடம் செல்கிறது என்பது குறித்தும் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
திருப்பூர் நுகர்வோர் நலச் சங்க நிறுவனர் சரவணன், கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
திருப்பூர் நகரம் மற்றும் மாவட்டத்தில் பல சிக்னல்களில் முறையான அனுமதியின்றி விளம்பர பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து 50-க்கும் மேற்பட்ட முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அனைத்து சிக்னல்களிலும் உள்ள விளம்பர பலகைகளின் எண்ணிக்கை, அவற்றுக்காக வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் அதன் பயன்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், டிஜிட்டல் விளம்பர பலகைகளுக்கு தெருவிளக்கு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.
உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படும் முன், அனுமதியின்றி சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்றி, இதுதொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
