/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரலட்சுமி பூஜை; சீர்வரிசையுடன் வழிபாடு
/
வரலட்சுமி பூஜை; சீர்வரிசையுடன் வழிபாடு
ADDED : ஆக 16, 2024 11:26 PM

பல்லடம்;பல்லடம், பனப்பாளையத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு மற்றும் வரலட்சுமி விரத பூஜைகள் நடந்தன.
முன்னதாக, ஊருக்கு மத்தியில் உள்ள நாட்டாங்கல்லுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. புடவை, வளையல், பூ, பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சந்தனம், தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை சீர்வரிசைகளை பெண்கள் எடுத்து வந்து பூஜையில் வைத்தனர். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க சீர்வரிசைகளுடன் பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். பனப்பாளையம், காரணப்பெருமாள் கோவிலுக்கு சீர் வரிசைகள் எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடுகள் நடந்தன. அங்கிருந்து எடுத்துவரப்பட்ட சீர் வரிசைகள் மாகாளியம்மனுக்கு வழங்கப்பட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சிறப்பு வளையல் அலங்காரத்தில் மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் கூறுகையில், 'ஊரில் எந்த விழா நடந்தாலும் நாட்டாங்கல்லுக்கு பூஜை செய்த பின்பு தான் துவங்குவோம். பல ஆண்டுகளாக இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. வரலட்சுமி விரதமான இன்று (நேற்று) அண்ணனான பெருமாள், தங்கை மாரியம்மனுக்கு சீர்வரிசைகளை வழங்குவதாக ஐதீகம். அதன்படி, பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசைகள் மாகாளியம்மனுக்கு வழங்கப்பட்டன'' என்றனர்.
--
பல்லடம், பனப்பாளையத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு மற்றும் வரலட்சுமி விரத பூஜைகள் நடந்தன. இதையொட்டி நாட்டாங்கல்லுக்கு வழிபாடு நடந்தது.

