/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேத பாராயணம் முழங்க கொடியேற்றம்
/
வேத பாராயணம் முழங்க கொடியேற்றம்
ADDED : ஏப் 15, 2024 12:21 AM

அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாகத் துவங்கியது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இந்தாண்டு சித்திரைத் தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக கணபதி, சோமாஸ்கந்தர், ஸ்ரீ கருணாம்பிகை அம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவர்கள் கொடி மண்டபத்துக்கு எழுந்தருளினர். கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனைகள் நடந்தன.
கோவில் கொடிமரத்தில் கொடியேற்றும் முறை பெற்றவர்கள் கொடியுடன் கோவிலை வலம் வந்து கொடிமரத்தில் கொடியேற்றினர். பெங்களூரு வேதாகம ஸமஸ்கிருத மஹா பாடசாலை முதல்வர் சிவஸ்ரீ சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் முன்னிலையில், பாடசாலை மாணவர்கள் வேத பாராயணம், சூர்ணிகை பாராயணம், திருமுறை பாராயணம் ஓத, நிகழ்ந்த கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
20ம் தேதி அதிகாலை பூர நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேர்களுக்கு எழுந்தருளல், 21ம் தேதி காலை பெரிய தேர் வடம் பிடித்து வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 22ம் தேதி காலை பெரிய தேர் வடம் பிடித்து நிலை நிறுத்தல், 23ம் தேதி காலை ஸ்ரீ அம்மன் தேர் வடம் பிடித்தல், ஸ்ரீ சுப்பிரமணியர்,ஸ்ரீ சண்டிகேஸ்வரர்,ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் தேர்கள் வலம் வருதல் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீனிவாசன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.

