/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
' விஜயக் கொடி' : ரசிகர்கள் உற்சாகம்
/
' விஜயக் கொடி' : ரசிகர்கள் உற்சாகம்
ADDED : ஆக 23, 2024 01:53 AM

திருப்பூர்;'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை துவக்கிய நடிகர் விஜய், கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி, அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். கொடியில் சிவப்பு, மஞ்சள் நிற கொடியில் இரண்டு போர் யானைகளுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற்றுள்ளது. கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட்டார். 'தலைவன் கொடி... தருமக் கொடி... தாயின் கொடி... வீரக் கொடி...
விஜயக் கொடி...' என பாடல் வரிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
திருப்பூரில் கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடத்தில், நேற்று அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பல இடங்களில் கட்சி கொடியேற்றினர்.
த.வெ.க., மத்திய மாவட்ட தலைவர் பாலமுருகன் கூறியதாவது:
விஜய் ரசிகர் மன்றமாக இருந்து, மக்கள் இயக்கமாக மாறி, அரசியல் கட்சியாக உருவெடுத்து, கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த, 30 ஆண்டாகவே, மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சென்னையில் கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த 30வது நிமிடத்தில் திருப்பூரின் பல இடங்களில் கொடியேற்றி விட்டார்கள். திருப்பூரில், கட்சிக் கொடி இல்லாத இடமே இல்லை என்ற நிலையை உருவாக்க உள்ளோம். ரசிகர்கள், மக்கள் மத்தியில் எழுச்சியை காண முடிகிறது. திருப்பூரில் நிலவும் பிரச்னைகளை கட்சித்தலைமை கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு காண முயற்சி மேற்கொள்வோம். மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் செயல்படுவோம். வரும், 2026 தேர்தலில், கட்சியின் இலக்கை மனதில் வைத்து செயல்படுவோம்.
இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
--
தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்., உள்ளூர் பிரமுகர்கள் என்ன சொல்கிறார்கள்?
நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளது தொடர்பாக திருப்பூரில் உள்ள பிற அரசியல் கட்சி நிர்வாகிகளின் கருத்துகள், பலவிதமாக எதிரொலிக்கின்றன.
நடிப்புத்திறமை
அரசியல் எடுபடாது
செல்வராஜ், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர்:நடிகர் விஜய் கட்சி துவங்கியிருப்பது, தமிழக அரசியலில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நடிகர் விஜய், நடிப்பில் திறமைமிக்கவர்; அது, அரசியலில் எடுபடாது என்பது தான் யதார்த்தம்.
---
பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும்
செந்தில்வேல், பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர்ஜனநாயக நாட்டில், மக்களுக்கு நன்மை செய்ய யார் வேண்டுமானாலும், அரசியல் கட்சி துவங்கலாம். அது இயல்பு; வரவேற்கத்தக்கது. நடிகர் விஜயின் கொள்கைகள் எதுமாதிரி இருக்கிறது, நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்குமா, யாரையாவது 'தாஜா' செய்வது போன்று அரசியல் செய்கிறாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய யார் முன்வந்தாலும், பா.ஜ., வரவேற்கும். தமிழக வளர்ச்சி, நாட்டின் ஒற்றுமைக்கு நடிகர் விஜய், எப்படி யோசிக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.--
கட்சி துவங்கினால்
முதல்வராக முடியுமா?
கிருஷ்ணன், காங்கிரஸ் திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர்:கட்சி யார் வேண்டுமானலும் ஆரம்பிக்கலாம்; அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், நினைப்பது போன்று நடக்குமா என்ற சொல்வதற்கில்லை. '2026ல் முதல்வர்' என்ற இலக்கு வைத்து, பலரும் கட்சி துவங்குகின்றனர். அவர்கள், குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகளை மட்டும் பெறலாமே தவிர, பெரிய மாற்றம் வந்துவிடாது. கட்சி துவங்கும் அனைவருமே, ஆட்சியை பிடித்து விட முடியும்; முதல்வர் ஆகிவிட முடியும் என நினைக்கின்றனர்; தமிழகத்தில், அது முடியாது.
---
சொன்னதை செயலிலும் செய்வாரா விஜய்?
குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.,மாநில ஜெ., பேரவை இணை செயலாளர்: ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். மக்களுக்கு யார் நன்மை செய்தாலும், அதை வரவேற்க மக்கள் தயாராக உள்ளனர். தற்போதைய சூழலில், மாநில, நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். அ.தி.மு.க., என்ற ஒற்றை சக்தி மட்டுமே மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பி வருகிறது; இதற்கு வலு சேர்க்கும் வகையில் யார் வந்தாலும் வரவேற்கலாம். இளைஞர்கள் மத்தியில் ஒவ்வொரு சிந்தனையுண்டு. விஜய், சினிமாவில் சொன்னதை செயலிலும் காட்ட வேண்டும். இதே மாதிரி வேகத்தில் தான், நடிகர் கமல் கட்சி துவங்கினார். ஆனால், கொள்கையை உதறி சென்றுவிட்டார்; அப்படி செய்து விடக்கூடாது.