/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா 2 லட்சம் சிலைகள் தயார்
/
விநாயகர் சதுர்த்தி விழா 2 லட்சம் சிலைகள் தயார்
ADDED : ஆக 07, 2024 01:34 AM

திருப்பூர்:விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழகம் முழுதும், 2 லட்சம் சிலைகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் உள்ளது.
ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி திருப்பூரில், இரு இடங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்பணிகள் இன்னும், இரு வாரங்களுக்குள் முழுமையாக முடிந்து, இம்மாத இறுதியில் அந்தந்த பகுதிகளுக்கு சிலைகள் அனுப்ப தயாராகி வருகிறது.
இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:
தமிழகம் முழுதும், 2 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் முழுதும், 5,000 சிலைகள் வைக்கப்பட உள்ளன. விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுசூழல் பாதிக்காத வகையில், பேப்பர் கூழ், கிழங்கு மாவால் தயாரிக்கப்பட்டுள்ளன. வர்ணம், வாட்டர் கலர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு, விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 7 முதல், 15ம் தேதி வரை என, ஒன்பது நாள் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு விநாயகருக்கும், பத்து மரக்கன்றுகளை நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைப்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடக்க ஏற்பாடு நடக்கிறது.
விசர்ஜன ஊர்வலம், 9ம் தேதி அவிநாசி, தாராபுரம், பல்லடம், உடுமலை ஆகிய இடங்களில், 10ம் தேதி திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, 11ம் தேதி கோவை, 15ம் தேதி, சென்னை, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கிறது.
திருப்பூர், கோவையில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன், அவிநாசியில் பா.ஜ., மூத்த தலைவர் ராஜா என, பலர் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.