/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயக சதுர்த்தி கட்டுரை மாடுகளை காத்த பிள்ளையார்
/
விநாயக சதுர்த்தி கட்டுரை மாடுகளை காத்த பிள்ளையார்
ADDED : செப் 06, 2024 03:20 AM

'திருடர்களிடமிருந்து பசு மாடுகளை காக்க வேண்டி, விவசாயிக்கு அழைப்பு விடுத்ததால், காரணம்பேட்டையில் உள்ள விநாயகர், 'கூப்பிடு பிள்ளையார்' எனும் பெயர் பெற்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
பல்லடம், காரணம்பேட்டை அருகே, என்.எச்., ரோட்டில் அமைந்துள்ளது கூப்பிடு பிள்ளையார் கோவில். நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவில் குறித்து, சின்னசாமி கூறியதாவது:
காரணம்பேட்டையில் வசித்து வந்த விவசாயி ஒருவர், தனது பசுமாடுகளை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார். நள்ளிரவில், தோட்டத்துக்குள் புகுந்த திருடன், மாடுகளை களவாடிச் செல்ல, விவசாயின் கனவில் தோன்றிய விநாயகர், மாடுகளை மீட்டுக் கொள்ளுமாறு விவசாயிக்கு அழைப்பு விடுத்தார்.
விழித்தெழுந்த விவசாயி, தோட்டத்துக்குச் சென்று பார்த்த போது மாடுகளை காணவில்லை. இதனால், சைக்கிள் எடுத்துக்கொண்டு மாடுகளை தேடி புறப்பட்டார். இதற்கிடையே, மாடுகளை களவாடிச் சென்ற திருடன் கண் தெரியாமல் நின்றிருருக்க, அவனிடமிருந்து மாடுகளை மீட்ட விவசாயி, திருடனை எதுவும் செய்யாமல் அனுப்பி வைத்தார்.
விவசாயின் கனவில் தோன்றி, திருடு போன மாடுகளை மீட்டுக் கொள்ள அழைப்பு விடுத்ததால், இங்குள்ள விநாயகருக்கு 'கூப்பிடு பிள்ளையார்' என்ற பெயர் அமைந்தது. கோவிலில், பிள்ளையார் சுயம்பு வடிவில் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் பலரும் நினைத்த காரியம் நிறைவேறுவதால் நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவிலில், ஆதி விநாயகர், முருகன், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, வரலட்சுமி, துர்க்கை ஆகிய பரிவார மூர்த்திகளும் உள்ளன. கோவில் முன் ஸ்தல விருட்சமாக புங்கை மரம் உள்ளது. இதனுடன், தற்போது வேம்பு மரமும் வளர்கிறது. விநாயகர் சதுர்த்தி உட்பட, மாதாந்திர சதுர்த்தி, சஷ்டி, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட தினங்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
----------------------
எங்கே உள்ளது
பல்லடம் அருகே காரணம்பேட்டையில், என்.எச்., ரோட்டில் அமைந்துள்ளது.
பூஜை நேரம்: காலை, 6:00 முதல், மதியம், 12:00 மணி வரை. மாலை, 5:00 முதல், இரவு, 7:00 மணி வரை.
தொடர்புக்கு: