/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரின் முதல் சேர்மன் விட்டல்தாஸ்
/
திருப்பூரின் முதல் சேர்மன் விட்டல்தாஸ்
ADDED : ஆக 18, 2024 12:32 AM

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், குஜராத்தைச் சேர்ந்த பலர், திருப்பூரில் 'செட்டில்' ஆகி பருத்தி வியாபாரத்தில் ஈடுபட்டு, பெரும் பணம், பொருள் ஈட்டி, செல்வந்தர்களாக இருந்துள்ளனர். அவர்களில் சிலர், தங்களை வாழ வைத்த ஊருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், தங்கள் சொத்தின் பெரும் பகுதியை தானமாக வழங்கி, அழிக்க முடியாத சில அடையாளங்களை திருப்பூருக்கு விட்டு சென்றுள்ளனர். அந்த வரிசையில் முக்கிய இடம் பெற்றிருப்பவர் விட்டல்தாஸ்; திருப்பூர் நகராட்சியின் முதல் சேர்மன்.திருப்பூர், தென்னம்பாளையம், கருவம்பாளையம், வாவிபாளையம் ஆகிய கிராமங்களை இணைத்து, கடந்த, 1917ல், மூன்றாம் நிலை நகராட்சி உருவாக்கப்பட்டது. இதன் முதல் சேர்மன், ராவ்சாஹிப் விட்டல்தாஸ். அதுவரை, தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் தான் நகராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. பின், தனக்கு சொந்தமான இடத்தையே நன்கொடையாக வழங்கி, நகராட்சி அலுவலகம் கட்ட ஏற்பாடு செய்துள்ளார் விட்டல்தாஸ். (தற்போது மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம்)
வெறும் மூன்றரை ஆண்டு காலம் மட்டுமே சேர்மனாக இருந்த இவரது காலத்தில் தான், நொய்யலாற்றில், மேல்மட்ட பாலம் கட்டப்பட்டது. இன்றுள்ள மாவட்ட மைய நுாலக கட்டடம்; பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள கால்நடை மருத்துவமனை அமைந்துள்ள இடம் ஆகியவையும், இவர் நன்கொடையாக வழங்கியது தான். இவரது தன்னலமற்ற சேவையை பாராட்டி, அப்போதைய அரசு, அவருக்கு 'ராவ் சாஹிப்' என்ற பட்டம் வழங்கி கவுரவித்தது.
கடந்த, 1914ல் அர்பன் வங்கியை துவக்கிய, 11 பேரில் இவரும் ஒருவர்; அந்த வங்கி, நுாறாண்டும் கடந்து சிறப்புற செயல்பட்டு வருகிறது. இவரது மகன்களில் ஒருவரான கோவிந்ததாஸ், சுதந்திர போராட்டத்தில் சிறை சென்ற தியாகி. காமராஜர் வீதியை இணைக்கும் குறுக்கு வீதி 'விட்டல்தாஸ் சேட் வீதி' என பெயரிடப்பட்டு, அவரை நினைவை பரப்பி வருகிறது.

