/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீணாகும் ஸ்கூட்டர்: மாற்றுத்திறனாளிகள் வேதனை
/
வீணாகும் ஸ்கூட்டர்: மாற்றுத்திறனாளிகள் வேதனை
ADDED : மார் 13, 2025 05:15 AM

திருப்பூர்: இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருக்காக மாற்றுத்திறனாளிகள் மாத கணக்கில் காத்திருக்கும் நிலையில், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், இரண்டு ஸ்கூட்டர் பயன்பாடின்றி பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், வீட்டிலேயே முடங்கி விடாமல், சுய தொழில் செய்யவும், வேலைக்குச் செல்லவும் ஸ்கூட்டர் கைகொடுக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், பலரும் ஸ்கூட்டர் பெற மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆனாலும், விண்ணப்பித்து பல மாத காத்திருப்புக்குப்பின்னரே, மாற்றுத்திற னாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் கிடைக்கிறது.
இந்நிலையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமோ, புதுமை மாறாத, இணைப்பு சக்கரம் பொருத்திய இரண்டு ஸ்கூட்டர்களை வீணடித்து வருகிறது. 'TN 78 H 0886' என்ற பதிவெண் கொண்ட இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர், தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 2024, மே மாதம் பதிவு செய்யப்பட்டது. அரசு அலுவலர்களுக்கு, இலவச ஸ்கூட்டர் வழங்கக்கூடாது என்கிற நிலையில், இந்த ஸ்கூட்டர், ரேஷன் பணியாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஸ்கூட்டரை கையகப்படுத்திய மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர், கலெக்டர் அலுவலகத்தில், கனரா வங்கி அருகே நிறுத்தி வைத்துள்ளனர். மற்றொரு ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வழங்க ஏற்பாடுகள் நடந்த போது, அவர் இறந்துவிட்டார். இதனால், பதிவு செய்யப்படாமலேயே, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இ-சேவை பிரிவு அருகே, நிறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பித்து பல மாதங்களாகியும் ஸ்கூட்டர் வழங்கப்படாத நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டு ஸ்கூட்டர்கள், பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது மாற்றுத்திறனாளிகளை கவலை அடையச் செய்கிறது.
இரண்டு ஸ்கூட்டர்களும் துாசு, ஒட்டடை படிந்தும், இயக்கமே இல்லாததால் புதுமை பழுதடையும் நிலையில் உள்ளன. துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறுவதற்குள், காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்விரு ஸ்கூட்டர்களையும் பெயர் மாற்றம் செய்து வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.