/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் மறந்தோம்; பருவநிலை பிறழ்கிறது
/
சுற்றுச்சூழல் மறந்தோம்; பருவநிலை பிறழ்கிறது
ADDED : ஏப் 22, 2024 12:36 AM
வெற்றி பெறும் வேட்பாளர்களும், ஆட்சிக்கு வரும் அரசும், இயற்கையை காப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.
சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம், நம்முடன் பகிர்ந்தவை:
அரசியல் கட்சிகள் வழங்கும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த வாக்குறுதிகள், பெயரளவில் மட்டுமே இருக்கிறது. சில அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயத்தை மறந்தே விடுகின்றன.
காலநிலை மாற்றத்தின் வீரியத்தை தற்போது உணரத் துவங்கியிருக்கிறோம். இம்முறை, வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. சில இடங்களில் வழக்கத்துக்கும் மாறாக, 2,3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்திருக்கிறது.
பல இடங்களில் தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. காலநிலை மாற்றம் என்பதை கடந்து, பருவநிலைப் பிறழ்வு என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இதை சரி செய்ய, இந்த பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான பசுமை பரப்பு அதிகப்படுத்தும் திட்டங்களை அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும். உள்ளூர் நீராதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
மழைநீர் சேமிப்புமறந்துவிட்டோம்
குளம், குட்டைகளை துார்வாரி, பாதுகாத்து, பருவமழைக் காலங்களில் மழைநீரை சேமிக்கும் திட்டத்தை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும். வனப்பாதுகாப்பு சட்டத்தை பலப்படுத்த வேண்டும். வன உயிரினங்களை பாதுகாக்கும் சட்டங்களை கடுமையாக்க வேண்டும். வனப்பகுதிக்குள் எவ்வித மேம்பாட்டு திட்டங்களையும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கான சட்டம் இயற்ற வேண்டும்; வனப்பரப்பை கூடுதலாக்க வேண்டும். மக்கள் வாழத்தகுந்த சூழலை உருவாக்க வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க வளங்களை மீண்டும், மீண்டும் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, மின்சாரம் இல்லாமல் எந்த தொழிலும் இல்லை. நிலக்கரியில் இருந்து தான் அதிகளவு மின்சாரம் எடுக்கப்படுகிறது. இது, புவி வெப்பமயமாதலுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இதை தவிர்த்து, சோலார் மின்னாற்றல், காற்றாலை மின்சாரம், கடல் அலை மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்தி, நீடித்த வளர்ச்சியை நோக்கி நாட்டை கொண்டு செல்ல வேண்டும்.
நீரோடை ஆக்கிரமிப்பு பாரபட்சமின்றி அகற்றம்
நகரில் ஓடும் ஆறு, நீரோடைகளில் மழைநீர் வழிந்தோடி வருவதற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகள், பாரபட்சமின்றி அகற்றப்பட வேண்டும்.
இன்றைய பாடத்திட்டம் என்பது, வேலைவாய்ப்பு, அது சார்ந்த வருமானம் ஈட்டுவது என்ற நிலையில் தான் உள்ளது. அதோடு சேர்த்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதுசார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான பாடங்களையும் இணைக்க வேண்டும்.
அதோடு கட்டுமானம், தொழில், வேளாண்மை உள்ளிட்ட தொழில்களை இயற்கையோடு இணைந்து மேற்கொள்வது தொடர்பான பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும். வேளாண் துறை சார்ந்த கல்வியை ஊக்குவிக்க வேண்டும்; குறிப்பாக, இயற்கை விவசாயம், அதில் ஏற்படும் இடையூறு, அதை சரி செய்யும் விதம் குறித்த விளக்கத்தை, பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும். இன்னும் பிறவா தலைமுறைக்கும் வழிகாட்டும் வகையில், பாடத் திட்டம் அமைய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

