/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனச்சூழலை பாதிக்கும் களைச்செடி அதிகரிப்பு; புலிகள் காப்பகத்தில் அகற்ற எதிர்பார்ப்பு
/
வனச்சூழலை பாதிக்கும் களைச்செடி அதிகரிப்பு; புலிகள் காப்பகத்தில் அகற்ற எதிர்பார்ப்பு
வனச்சூழலை பாதிக்கும் களைச்செடி அதிகரிப்பு; புலிகள் காப்பகத்தில் அகற்ற எதிர்பார்ப்பு
வனச்சூழலை பாதிக்கும் களைச்செடி அதிகரிப்பு; புலிகள் காப்பகத்தில் அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : செப் 17, 2024 10:08 PM

உடுமலை : ஆனைமலை புலிகள் காப்பக வனத்தில், இயல்பான வனச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், களைச்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்துக்குட்பட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், 447 சதுர கி.மீ., வனப்பரப்பு உள்ளது.
இந்த வனத்தில், அரிய வகை தாவர உண்ணிகள் அதிகளவு உள்ளன. இயல்பான வனச்சங்கிலி சுழற்சியில், தாவரங்களும், தாவர உண்ணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், அரிய வகை தாவரங்களின் வளர்ச்சியை முடக்கும், களைச்செடிகள் பல்வேறு காரணங்களால், வனப்பகுதியில், வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக, சீமைகருவேல மற்றும் 'லெண்டானா' எனப்படும் உண்ணி செடி தாவரங்கள் இரு வனச்சரகங்களிலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களின் மையப்பகுதியில், மூணாறு ரோடு செல்கிறது. இந்த ரோட்டோரத்தில், பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.
தண்ணீர் தேவைக்காக இடம் பெயரும், யானை மற்றும் மான்கள், அம்மரத்தில் இருந்து விழும் விதைகளை உண்கின்றன. இவ்வாறு, வனத்தின் அனைத்து பகுதிக்கும் சீமை கருவேல மரங்கள் பரவுகின்றன.
பிற தாவரங்களை வளர விடமால் தடுக்கும், லெண்டானா உண்ணி செடிகள் பரவலும் அதிகரித்துள்ளது.
வனப்பகுதியில், வனவிலங்கு கணக்கெடுப்பின்போது, களைச்செடிகள் குறித்த விபரங்களும் பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில், களைச்செடிகளை அகற்ற, வனத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது.
ஆனால், குறைந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பெயரளவுக்கே, களைச்செடிகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதில், 'லெண்டானா' செடிகளை, 5 ஆண்டுகள் வரை, கண்காணித்து, வேருடன் அகற்றினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
அத்தகைய தொலைநோக்கு திட்டங்கள் எதையும் வனத்துறை செயல்படுத்துவதில்லை. அரிய வகை தாவரங்கள் மற்றும் தாவர உண்ணிகளை பாதுகாக்க, தொலைநோக்கு திட்டத்தை வனத்துறை செயல்படுத்துவது அவசியமாகும்.
இல்லாவிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்; வனத்தில் தேவையான உணவு கிடைக்கும் போது, விளைநிலங்களை தேடி வனவிலங்குகள் இடம் பெயர்வது தவிர்க்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.