/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களை கட்டிய புளி சீசன் கிலோ ரூ.100 ஆக சரிவு
/
களை கட்டிய புளி சீசன் கிலோ ரூ.100 ஆக சரிவு
ADDED : ஏப் 10, 2024 12:33 AM
- நமது நிருபர் -
புளியம்பழ சீசன் களைகட்டி உள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த புளியங்காய்களை சுத்தப்படுத்தி, விற்பனை செய்து வருகின்றனர். சந்தைக்குப் புளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கிலோ, 100 ரூபாயாக சரிந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், திங்கள்தோறும் நடைபெறும் காங்கயம் வாரச்சந்தை, புளிக்கு மிக முக்கியமான சந்தை. இந்த சந்தைக்கு பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், புளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
காலை, 6:00 மணிக்கு துவங்கும் சந்தையில், விவசாயிகள், 9:00 மணிக்குள் விற்பனை செய்து விட்டு தங்கள் வேலைகளைப்பார்க்க கிளம்பி விடுகின்றனர். மொத்த வியாபாரிகள், ஒரு ஆண்டு தேவைக்கு வாங்கும் பொதுமக்கள் என, ஏராளமானோர் புளியை வாங்கிச் செல்கின்றனர்.
வியாபாரிகள் கூறியதாவது: சீசன் நேரத்தில் புளி வரத்து அதிகரித்ததால் விலை, 170 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாக சரிந்துள்ளது. இது புளியைச் சுத்தப்படுத்தும் கூலிக்கே போதுமானதாக இல்லை.
விபரம் தெரிந்த பொதுமக்கள், ஒரு ஆண்டுக்கு தேவையான புளியை வாங்கிச்செல்கின்றனர். ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு, ஏறத்தாழ, 10 கிலோ புளி தேவைப்படும்.
எனவே, பத்து கிலோ மூட்டைகளாக விற்பனை செய்கிறோம். சீசன் முடிந்து கடைகளில் வாங்கும் பொழுது, 100 முதல், 200 சதம் விலை உயர வாய்ப்புள்ளது. அதுவும் கையால் கொட்டை நீக்கி சுத்தம் செய்த புளி கிடைக்காது.
பொதுமக்கள் வருகை மேலும் அதிகரிக்கும் பொழுது, புளி விலையும் ஓரளவு உயரும். எங்களுக்கும் கட்டும்படியாகும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

