/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டுப்பதிவு அதிகரிக்க என்ன செய்யலாம்?
/
ஓட்டுப்பதிவு அதிகரிக்க என்ன செய்யலாம்?
ADDED : ஏப் 28, 2024 12:39 AM

திருப்பூர் லோக்சபா தொகுதியில் ஏறத்தாழ 30 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையைச் செலுத்த தவறியுள்ளனர். நுாறு சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், வாக்காளர்களாக முன்வந்தால் ஒழிய, இது சாத்தியமாவது சிரமமே.
சுந்தரம், கல்லுாரி மாணவர்:
ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் கடமையை உணர்ந்து ஓட்டளிக்க வேண்டும் என உணர்வை, இளம் வாக்காளர் முதல், முதியோர் வரை அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும். மக்கள் சென்று வரும் வகையில் ஓட்டுச்சாவடிகள் அருகில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, கூடுதல் வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடி களை பிரித்திட வேண்டும். காத்திருக்க வேண்டியதில்லை என்பது தெரிந்தால், பலரும் ஓட்டளிக்க முன்வருவர்.
கவிப்பிரியா, முதல் முறை வாக்காளர்:
ஓட்டளிப்பதற்கு நேர வரையறை கொண்டு வர முயற்சிக்கலாம். காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கினால், சுறுசுறுப்பாக ஓட்டுச்சாவடி மையங்கள் மாற, 9:00 மணியாகி விடுகிறது. மாலை, 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெறுகிறது. காலை, 7:00 மணிக்கு பதிலாக, 8:00 மணிக்கு துவங்கி, இரவு, 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தலாம். ஓட்டுப்போட்டவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தலாம். இதனால், இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் ஓட்டளிப்பர்.
டாக்டர் குமார்:
வெளிநாடுகளில் வசிக்கும் பலர் ஓட்டளிக்க விரிவான ஏற்பாடுகள் இல்லை. லோக்சபா, சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களிலும் இப்பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. நேரில் வர இயலாத, ஓட்டளிக்க தகுதியானவர்கள் ஓட்டளிக்க தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்ய முயற்சிக்க வேண்டும். முதியோரிடம் வீட்டுக்கு சென்று வாக்களிக்க வைப்பது போல், வெளிநாடு வாழ் இந்தியருக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.
ரேவதி, கல்லுாரி மாணவி:
அடுத்த தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பதற்கான முயற்சிகளை இப்போதிருந்தே துவக்க வேண்டும். ஓட்டுப்போட்டு நாம் தேர்ந்தெடுப்பது எம்.பி., மட்டுமல்ல, நாட்டுக்கான தலைவரும் (பிரதமர்) கூட என்பதை ஒவ்வொரு வாக்காளர்களுக்கு புரிய வைக்கும் வகையில், விழிப்புணர்வு அமைய வேண்டும். ஓட்டளிப்பது அனைவரின் உரிமை என்பதை மனதில் பதிய வைக்க வேண்டும்.
டாக்டர் தீனதயாளன்:
ஓட்டளிப்பது எப்படி, நாம் ஓட்டளித்தால் ஒருவர் (எந்த கட்சியாக இருந்தாலும்) வெற்றி பெற்று பார்லிமென்ட் செல்கிறார். அவரால் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார் என்பதை விளக்கும் வகையில் குறும்படம் தயாரிக்கலாம். வாக்காளர்கள் ஓட்டளித்து வெற்றி பெற்ற முதல் முறை எம்.பி.,க்கள் மூலம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குறும்படம் தயாரிக்கலாம். அதிக முறை ஓட்டளித்த, வாக்காளர்களை கண்டறிந்து, அவர்கள் ஓட்டுக்கு கிடைத்த முக்கியத்துவத்தை ஆவண படமாக தயாரித்து, தேர்தல் கமி ஷனே சமூக வலைதளங்களில் ஓட்டளிப்பது நமது உரிமை என்பதை எடுத்துரைக்கும் வகையில் பதிவேற்றலாம்.

