/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எது உண்மையான சுதந்திரம்? இயற்கையை மதியுங்கள்
/
எது உண்மையான சுதந்திரம்? இயற்கையை மதியுங்கள்
ADDED : ஆக 18, 2024 01:54 AM
'சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்வு முறையை நாம் கடைபிடித்தால் தான், போராடி பெற்ற சுதந்திரம் நிலைத்து நிற்கும்'' என்கிறார், சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம். அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
சுதந்திரம் என்பது கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், பேச்சு, எழுத்து போன்ற உரிமைகளை பாதுகாப்பது மட்டுமல்ல; சுற்றுச்சூழலையும் சேர்த்து பாதுகாக்க வேண்டியதன் கடமையை உணர்த்தும் ஒரு நாளாகும். இன்று, உலகம் முழுக்க, சூழல் கேடுகளால் மனிதர்களின் வாழ்வு, கடும் நெருக்கடி, சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது; மனித இனம் சீரழிந்து வருவதை நாம் பார்க்கிறோம்.
காலநிலை மாற்றம், பெருமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதன் விபரீதத்தை உணர்ந்து, நம்மை போன்ற சுதந்திரம் பெற்ற உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி, சுற்றுச்சூழலுக்கான வாழ்வு முறை குறித்த பொதுவான முழக்கத்தை முன்னெடுக்கின்றன.
ஏராளமானோர் ரத்தம் சிந்தி, உயிர் தியாகம் செய்து போராடி பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்க வேண்டும்; இது, தனி ஒருவரால் சாத்தியப்படாது. மனிதர்களின் கூட்டு முயற்சி, உறுதியான நடவடிக்கையால் மட்டுமே சாத்தியப்படும்.பயன்படுத்தும் பொருட்களை மறு சுழற்சி செய்வதற்கான தொழில் நுட்பத்தை வளரும் நாடுகள் பயன்படுத்த வேணடும். நீர், நிலம், காற்று போன்ற நாட்டின் வளங்கள் குறைந்துக் கொண்டே வருகிறது; அந்த வளங்களின் வாயிலாக தான் மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. காந்தியடிகள் கூறியவாறு, நுகர்வு பண்பாட்டை கடைபிடிக்க வேண்டும். தேவைக்கானதை மட்டும் வாங்க வேண்டும். வளங்களை விட்டுச் செல்வதே, அடுத்த தலைமுறையினருக்கு நாம் வழங்கும் பரிபூரண சுதந்திரம்.
-----------
சுயமாகச் சிந்தியுங்கள்
''சுயமாக சிந்தித்து முடிவெடுப்பதே உண்மையான சுதந்திரம்; அதை இளைய சமுதாயத்தினர் மெல்ல, மெல்ல இழந்து வருகின்றனர்'' என்கிறார், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்.அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த நாட்டில், சுதந்திர காற்றை சுவாசிக்க எண்ணற்றோர் தங்களை தியாகம் செய்துள்ளனர். அதன் விளைவாக, சுதந்திரமாக சிந்திக்கவும், செயல்படவும் மக்கள் உரிமை பெற்றனர். கல்வி, பொருளாதாரம் உள்ளிட்டவையும் வளர்ந்து வருகின்றன. ஆணுக்கு நிகராக பெண்களும் முன்னேறுகின்றனர். சமூக, பொருளாதார விழிப்புணர்வு என்பது அதிகரித்து வருகிறது.இன்றைய சூழலில், தகவல் தொழில்நுட்பமும் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என, ஏராளமான சமூக ஊடகங்கள் வந்து விட்டன. அவற்றில் பல்வேறு தகவல்கள் பரவுகின்றன. அதில் எது உண்மை, எது பொய் என அதன் நம்பகத்தன்மையை உணர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.பொய்யான, சித்தரிக்கப்பட்ட விஷயங்களை கூட மக்கள் நம்பும் நிலை காணப்படுகிறது. சிந்தனைகளும், முடிவுகளும் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன; இது, ஏற்புடையதல்ல. சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இளைய சமுதாயம் இழந்து வருவது வேதனைக்குரியது. சுயமாக சிந்தித்து முடிவெடுப்பது தான், சுதந்திரம் பெற்றதன் பலன்.மக்களுக்கு தரமான கல்வி, மருத்துவம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்; அவற்றை இலவசமாக கிடைக்க செய்வதும் அவர்களுக்கான சுதந்திரம். இவையிரண்டும் வணிகமயமாகி போனதால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பொருளாதாரத்தில் நசுக்கப்பட்டிருக்கின்றனர்; இந்நிலை மாற வேண்டும்.தாய்மொழி கல்வி என்பதும் பெற்ற சுதந்திரத்தின் ஒரு அங்கம் தான், இதை கல்வி நிறுவனங்கள் புரிந்து, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்; மொழிப்பற்றை வளர்த்தெடுக்க வேண்டும்.

