/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எந்த வேட்பாளருக்கு 'நல்ல நேரம்!'
/
எந்த வேட்பாளருக்கு 'நல்ல நேரம்!'
ADDED : மார் 25, 2024 01:20 AM
திருப்பூர்;திருப்பூர் தொகுதியில், இந்திய கம்யூ., - அ.தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இன்று மனுத்தாக்கல் செய்கின்றனர். பிரதமை திதி வருவதற்கு முன்னதாக, நல்ல நேரத்தில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில், லோக்சபா தேர்தல், ஏப்., 19ல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல், 20ம் தேதி துவங்கியது; திருப்பூர் தொகுதியில் இதுவரை, நான்கு சுயே., வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பங்குனி உத்திரம் என்பதால், வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் காலை, 11:00 மணி துவங்கி, மதியம், 3:00 வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு துவங்கி மதியம், 12:00 வரை எமகண்டம் என்பதால், அதற்கு பிறகே மனுத்தாக்கலுக்கு வர வாய்ப்புள்ளது.
குறிப்பாக, மதியம் 1:16 மணி வரை மட்டுமே பவுர்ணமி திதி இருக்கிறது; அதற்கு பிறகு, பிரதமை திதி என்பதால், அதற்கு முன்பாகவே மனுத்தாக்கல் செய்ய, வேட்பாளரின் உதவியாளர்கள், முன்கூட்டியே ஏற்பாடுகளை துவக்கிவிட்டனர்.
'டிபாசிட்' தொகை செலுத்தி ரசீது பெறுவது, வேட்புமனு சரிபார்ப்பு, வாக்காளர் பட்டியல் விவரம் ஒப்பிட்டு சரிபார்ப்பு பணிகளை முடித்து வைத்தால், உடனுக்குடன் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என, திட்டமிட்டுள்ளனர்.
தி.மு.க., கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் (இந்திய கம்யூ.,) திருப்பூர் குமரன், ஈ.வெ.ரா., - அண்ணாதுரை, காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு, கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் சென்று மனுத்தாக்கல் செய்கிறார்.
அ.தி.மு.க., வேட்பாளர் அருணாசலம், மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர்., - ஜெ., சிலைகளுக்கு மலர் மரியாதை செய்துவிட்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் சென்று, மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.
பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம், கட்சி நிர்வாகிகளுடன் கோட்டை மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்; திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின், மனு தாக்கல் செய்ய, திட்டமிட்டுள்ளனர். கட்சியின் நிர்வாகிகளுடன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியினர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி மற்றும் திருப்பூர் தொகுதிகளில் இன்று மனுத்தாக்கல் செய்கின்றனர். திருப்பூர் வேட்பாளர் சீதாலட்சுமி, நிர்வாகிகளை சந்தித்து ஆசி பெற்று, இன்று வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.
வேட்பாளர்கள் முன்கூட்டியே தகவல் அளித்துள்ளதால், கலெக்டர் அலுவலகத்தில், கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

