/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள்; கட்டுப்படுத்தும் வழிமுறை
/
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள்; கட்டுப்படுத்தும் வழிமுறை
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள்; கட்டுப்படுத்தும் வழிமுறை
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள்; கட்டுப்படுத்தும் வழிமுறை
ADDED : பிப் 22, 2025 07:02 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், 1.99 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக தென்னையில், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
தாக்கப்பட்ட தென்னை மரங்களின் ஓலையின் அடிப்பரப்பில் வட்டம் அல்லது சுருள் வடிவில் வெள்ளை ஈக்கள் முட்டையிடுகின்றன. இவற்றின் குஞ்சுகள், தென்னை ஓலையின் சாற்றைஉறிஞ்சி முழு வளர்ச்சி அடைந்த ஈக்களாக மாறிவிடுகின்றன.
கீழடுக்கில் உள்ள ஓலைகளின் மீது பச்சை போன்ற கழிவு திரவம் படர்ந்து, அதன் மீது கரும்பூஞ் சாணம் வளர்கிறது. இதனால், ஓலையின் பச்சையம் செயலிழந்து, மகசூல் குறைகிறது. காற்றின் திசையில் பரவி, அடுத்தடுத்த மரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:
சுருள் வெள்ளை ஈக்களால் தாக்கப்பட்ட தென்னந்தோப்புகளில், ஏக்கருக்கு 2 வீதம் இரவு நேரங்களில், விளக்குப்பொறி வைத்து கவர்ந்திழுத்து அழிக்கலாம். மஞ்சள் நிற ஒட்டு பொறிகள், விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் தடவப்பட்ட மஞ்சள் நிற பாலிதீன் தாளை, ஏக்கருக்கு 10 வீதம், ஆறடி உயரத்தில் தொங்கவிட்டு, கவர்ந்திழுத்து அழிக்கலாம்.
தாக்கப்பட்ட மரங்களின் கீழ்மட்ட ஓலைகள் மீது விசைத்தெளிப்பானை கொண்டு தண்ணீரை அதிவேகமாக அடிக்கலாம். ஈக்களின் குஞ்சுகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட, நன்மை செய்யும் ஒட்டுண்ணியான என்கார்சியா கூட்டுப்புழுவை, ஏக்கருக்கு 20 வீதம், 10 மரம் இடைவெளியில் வைக்கலாம்.
பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிகளின் முட்டைகளான கிரைசோபிட் என்கிற இரை விழுங்கிகளை, ஏக்கருக்கு 400 முட்டைகள் வீதம் தாக்கப்பட்ட மரங்களில் விடவேண்டும்.
கரும்பூஞ்சாணத்தை கட்டுப்படுத்த, ஒரு கிலோ மைதாவை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து பசை தயாரிக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 250 கிராம் மைதா மாவு பசை சேர்த்து, 10 மில்லி ஒட்டும் திரவம் கலந்து, கரும்பூஞ்சாணம் உள்ள இலைகளில் தெளித்து, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு, அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்புகொள்ளலாம்.