/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் நிலைகளை யார் பாதுகாப்பது? பொதுமக்கள் கேள்வி
/
நீர் நிலைகளை யார் பாதுகாப்பது? பொதுமக்கள் கேள்வி
ADDED : மே 28, 2024 12:36 AM
பல்லடம்;''அரசு நிர்வாகமே குப்பை களை கொட்டி வந்தால் நீர் நிலைகளை யார் பாதுகாப்பது?'' என, பல்லடம் பி.டி.ஓ.,விடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
பல்லடம் அடுத்த, கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பிலிபாளையம்- - கரைப்புதுார் செல்லும் வழியில், ஊராட்சியின் குப்பைகள் அனைத்தும் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கடும் துர்நாற்றம், சுற்றுச்சூழல் மாசு மற்றும் நோய்த்தொற்று அபாயத்தை ஏற்படுத்தி வரும் குப்பை குவியலை அகற்ற வலியுறுத்தி, பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த கோர்ட், எட்டு வாரங்களுக்குள் குப்பைகளை அகற்ற உத்தரவிட்டது.
கோர்ட் விதித்த காலக்கெடு ஏப்., மாதமே நிறைவடைந்த நிலையில், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கடந்த சில தினங்கள் முன், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கரைப்புதுார் கிராம பொதுமக்கள், தாசில்தாரிடம் இது குறித்து வலியுறுத்தினார்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் ஜீவா தெரிவித்திருந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்படாததைத் தொடர்ந்து, நேற்று, பொதுமக்கள், பல்லடம் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் கூறுகையில், 'நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஆனால், நீர்நிலையை சாக்கடை கழிவுநீர் செல்லும் ஓடையாக மாற்றியதுடன், அருகிலேயே குப்பைகள், கழிவுகளை மலை போல் குவித்து வைத்து, ஊராட்சி நிர்வாகமே சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி வருகிறது.
குப்பைகளை அகற்ற வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், கோர்ட் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குவித்து வைத்துள்ள குப்பைகளை விரைவில் அகற்றாவிட்டால், பி.டி.ஓ., அலுவலகத்துக்கு குடியேறி விடுவோம். மேலும், இது தொடர்பாக கோர்ட் அவமதிப்பு வழக்கும் தொடர உள்ளோம்' என்றனர்.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட பி.டி.ஓ., மனோகரன், ''கரைப்புதுார் ஊராட்சி பகுதிகளை திருப்பூர் மாநகராட்சி உடன் இணைக்கும் திட்டம் உள்ளதால், விரைவில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.