சிங்கப்பூரில் இருந்து கடத்தல்; கோவையில் சிக்கியது ரூ.7 கோடி உயர்ரக கஞ்சா!
சிங்கப்பூரில் இருந்து கடத்தல்; கோவையில் சிக்கியது ரூ.7 கோடி உயர்ரக கஞ்சா!
ADDED : ஆக 12, 2025 08:20 AM

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்த இருவர் சிக்கினர். அவர்களிடம் இருந்து சுமார் 6.7 கிலோ கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கோவை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா என்ற உயர் ரக கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்க மற்றும் வான் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த பயணிகள் இருவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழவே, அவர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். பலகட்ட சோதனைகளுக்கு பிறகு, இருவரும் 6.7 கிலோ எடை கொண்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா என்ற உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பஹத் மோன் முஜீப், கஹைல் வாழமத்தில் உபைதுல்லா என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
மேலும், சிங்கப்பூரில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த வேறு 2 பயணிகளையும் சுங்கத்துறையினர் கடும் சோதனைக்கு ஆட்படுத்தினர். அவர்கள் மறைத்து வைத்திருந்த ரிமோட் கண்ட்ரோலுடன் இயங்கும் உயர்ரக ட்ரோன்கள் மற்றும் அதனை இயக்குவதற்கு தேவையான சாதனங்களை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ. 18.67 லட்சம் ஆகும்.
தொடர் விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம், பாண்டிதுரை சுப்பையா என்பது தெரிய வந்தது. இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது வெளிநாடுகளில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வீடுகளுக்குள்ளேயே வளர்க்கப்படும் ஒரு வகையான கஞ்சா செடியாகும். இது மண் இல்லாமல் நீர் கரைசல்கள் மூலம் வளர்க்கப்படுகிறது.
அண்மைக்காலமாக, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்த கஞ்சாவை நூதன முறையில் இந்தியாவுக்கு கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.