/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓடையை துார்வார உள்ளாட்சி நிர்வாகங்கள் கைகோர்க்குமா?
/
ஓடையை துார்வார உள்ளாட்சி நிர்வாகங்கள் கைகோர்க்குமா?
ஓடையை துார்வார உள்ளாட்சி நிர்வாகங்கள் கைகோர்க்குமா?
ஓடையை துார்வார உள்ளாட்சி நிர்வாகங்கள் கைகோர்க்குமா?
ADDED : ஆக 13, 2024 11:22 PM

பல்லடம்:பல்லடம் வழியாக செல்லும் நீரோடையை துார்வார உள்ளாட்சி அமைப்புகள் கரம் கோர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கோவை மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் நீரோடை, தொடர்ச்சியாக பல்லடம் வட்டாரத்திலுள்ள புளியம்பட்டி, அனுப்பட்டி, பணிக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக வருகிறது. பருவ மழை காலத்தில், இந்த கிராமங்களில் உள்ள குளம் குட்டைகள் நிரம்பிய பின், உபரி நீர், ஓடை வழியாக பல்லடம் வந்து ஒன்பதாம் பள்ளத்திலும், அங்கிருந்து தெற்குபாளையம் குட்டை மற்றும் ஓடை வழியே நொய்யலை சென்றடைகிறது.
பல்லடத்தின் மேற்கு பகுதியாக இருக்கும் புளியம்பட்டி, அனுப்பட்டி, கரடிவாவி, பருவாய், பணிக்கம்பட்டி, கே.அய்யம்பாளையம், கோடங்கிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பி.ஏ.பி., பாசன வசதி கிடையாது. இதனால், பருவ மழையை மட்டுமே நம்பி இப்பகுதியில் விவசாயம் நடந்து வருகிறது.
இந்த நீர் வழித்தட கிராமங்களில் உள்ள குளம் குட்டைகள், நீர்நிலைகள் நிரம்பினால், பல்லடம் வட்டார பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை என்பதே இருக்காது. இவற்றுக்கு மழைநீரை கொண்டு செல்வதில் நீர்வழித்தடங்களே முக்கிய ஆதாரமாக உள்ளன.
ஆனால், பல்லடம் வழியாக செல்லும் நீரோடை ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், முட்புதர்கள் மண்டியும், குப்பை கிடங்குகள் ஆக்கப்பட்டும் தனது சுயத்தை இழந்துள்ளது. இதனால், மழைநீர் சேகரிப்பும் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, நீர்வழிப் பாதைகளை மீட்டெடுத்து, ஓடையை முழுவதுமாக தூர்வார வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. வறட்சி மிகுந்த பகுதியான பல்லடம் வட்டாரத்தில், நீர் ஆதாரங்களை மீட்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஊராட்சி நிர்வாகங்களுடன், நகராட்சியும் கரம் கோர்த்து, நீரோடையை மீட்டெடுக்க வேண்டும். இந்த முயற்சிக்கு தன்னார்வ அமைப்புகளும் தங்களது பங்களிப்பை செலுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, எதிர்காலத்தில் பல்லடத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நீரோடையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பது விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.