/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய போலீஸ் கமிஷனர் அதிரடி காட்டுவாரா?
/
புதிய போலீஸ் கமிஷனர் அதிரடி காட்டுவாரா?
ADDED : ஆக 04, 2024 11:28 PM

கடந்த மாதம் திருப்பூர் போலீஸ் கமிஷனராக இருந்த பிரவீன்குமார் அபிநபு, சேலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி., லட்சுமி, திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இன்று பொறுப்பேற்க உள்ளார்.
திருப்பூர் மாநகர போலீசில், மொத்தம் உள்ள 12 போலீஸ் ஸ்டேஷன்களில், ஒவ்வொன்றிலும், 50 சதவீதம் வரை போலீஸ் பற்றாக்குறை தொடர்கிறது. இதனால், ரோந்து பணி, ஸ்டேஷன் பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. ஐந்து பேர் பார்க்க வேண்டிய வேலைகளை, ஒருவர் பார்க்க வேண்டியுள்ளது. குற்றப்பிரிவுகளில் சொற்ப எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர்.
கூடுதல் போலீசார் நியமிக்க வலியுறுத்த வேண்டிய நிலையில் புதிய கமிஷனர் உள்ளார்; மாநகர போலீசில் நீண்ட காலமாக புரையோடிக்கொண்டுள்ள 'கறை'களை அகற்றுவதோடு, பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு சாதிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
வசூல் மழை
எடுபிடிகள்
அதிகாரிகளின் ஆசி பெற்ற போலீசார் பெயருக்கு வேறு ஸ்டேஷன்களுக்கு மாற்றப்பட்டு, மீண்டும் 'பெவிலியன்' திரும்பி விடுகின்றனர். உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் சிலருக்கு டிரைவரை தவிர்த்து, எடுபிடி வேலைகளை பார்க்க போலீசார் சிலர், உடன் வலம் வருகின்றனர். லாட்டரி, மதுக்கடைகள் மூலம் வரும் வசூலைப் பார்த்து, 'பண மழை' நனைகின்றனர். சில அதிகாரிகளுக்கு டிரைவர்களாக இருக்கக்கூடியவர்கள், பதவி உயர்வு வந்தாலும், இடத்தை விட்டு நகராமல் நங்கூரமாக அமர்ந்துள்ளனர்.
விடுமுறையில்
பாகுபாடு
இன்ஸ்பெக்டர்கள் 'கண்டம்' ஆன வாகனங்களில் வலம் வருகின்றனர். ரோந்து வாகனங்களின் நிலை அதை விட பரிதாபம். ஸ்டேஷன்களில் போலீசார் மத்தியில் பாகுபாடு பார்த்து, பணி ஒதுக்கப்படும் அவலம் உள்ளது. அரசு அறிவித்த வார விடுப்புகளை ஒதுக்குவதில் கூட பாரபட்சம் நிலவுகிறது. விடுப்பு வழங்கியது போல் உயரதிகாரிகளுக்கு 'பொய்' ரெக்கார்டுகள் காட்டப்படுகின்றன. அடிப்படை பிரச்னை பலவற்றை முதலில் களைய வேண்டியுள்ளது.
முடங்கிய
திட்டங்கள்
குற்றங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த, 'இ-பீட்' முறை துாசி தட்டப்பட்டு சில மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்டது. 'பிங்க் பீட்'(பெண் போலீசார் அடங்கிய குழு) முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், ஆரம்பித்த வேகத்தில் திட்டம் மாயமானது. புதிய அதிகாரிக்கு மாநகரின் உண்மையான நிலைமையை ஒற்றர் படையினர் தெரியப்படுத்தாமல் விடுவதால், பழைய திட்டங்கள் கிணற்றில் போட்ட கல்லாகிறது.
தொழிலாளர் விபரம்
சேகரிப்பு என்னாச்சு?
வடமாநிலத்தினர் பரவலாக திருப்பூரில் தங்கி பின்னலாடை நிறுவனங்களில் வசித்து வருகின்றனர். இங்கு ஏராளமான வங்கதேசத்தினர், வடமாநிலத்தினர் போர்வையில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. அவ்வப்போது, போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டாலும், தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். வடமாநிலத்தினர் விபரம் சேகரிக்க 'சாப்ட்வேர்' முறைகளை கொண்டு வந்தனர். ஆனால், பணிகள் முறையாக செய்யப்படாமல், அந்தரத்தில் நிற்கிறது. மாநகரின் பாதுகாப்பை உறுதிபடுத்த, மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை ஆகியோருடன் இணைந்து வடமாநிலத்தினர் விபரம் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்த வேண்டும்.
போதைப்பழக்கத்துக்கு
மாணவரும் அடிமை
சமீப காலமாக கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. பெரிய புள்ளிகள் சிக்குவது கிடையாது. சிறிய அளவில் விற்பனை செய்யும் நபர்களை மட்டுமே போலீசார் கைது செய்கின்றனர். போதையால், அடிதடி, கொலை போன்றவை சில நேரங்களில் அரங்கேறி விடுகிறது. போதை வஸ்துகளை மாணவர்கள் பயன்படுத்தும் நிலையில் உள்ளது. சட்டவிரோதமாக மது, கஞ்சா, புகையிலை பொருட்களின் விற்பனையில், அரசியல் கட்சியினர், போலீசார் மறைமுகமாக கூட்டு வைத்து ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை உள்ளது. போலீசாரின் 'ஆசி'யில் தங்கள் எல்லை பகுதியில் தலை துாக்குகிறது.
ஏகப்பட்ட பிரச்னைகள்
எகிறும் குற்ற விகிதம்
தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நாளுக்கு நாள் எகிறும் குற்ற விகிதம், திடீர் போராட்டங்களால் ஏற்படும் பிரச்னைகள், ஆளும்கட்சியினரின் நெருக்கடி உட்பட பல விஷயங்களை எதிர்கொண்டு, இவற்றை லாவகமாக கையாண்டு, கமிஷனர் வெற்றிகொள்ள வேண்டும்.சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தி புதிய கமிஷனர் 'சாட்டை'யை சுழற்றுவாரா என, திருப்பூர் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நாளுக்கு நாள் எகிறும் குற்ற விகிதம், திடீர் போராட்டங்களால் ஏற்படும் பிரச்னைகள், ஆளும்கட்சியினரின் நெருக்கடி உட்பட பல விஷயங்களை எதிர்கொண்டு, இவற்றை லாவகமாக கையாண்டு, கமிஷனர் வெற்றிகொள்ள வேண்டும். சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தி புதிய கமிஷனர் 'சாட்டை'யை சுழற்றுவாரா என, திருப்பூர் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
துணிச்சல் மிக்க அதிகாரி
லட்சுமி, 1997ல் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.,யானார். கூடுதல் எஸ்.பி., மற்றும் எஸ்.பி.,யாக விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றினார். சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர்; தி.நகர், மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், கோவையில் துணை கமிஷனராக பணியாற்றினார். லஞ்ச ஒழிப்பு துறையில் சிறப்பாக செயல்பட்டார். நேர்மையான, துணிச்சல் மிக்க அதிகாரியான, இவர் பல்வேறு அதிரடிகளுக்கு பெயர் போனவர் என்று போலீசார் கூறுகின்றனர். சில ஆண்டுகள் முன் சொந்தப்பணி காரணமாக விருப்ப ஓய்வு கோரியபோது, அரசு தரப்பில் ஏற்று கொள்ளவில்லை. மீண்டும் பணிக்கு வந்தார்.
எதிர்ப்புகளால் கிடப்பில் போக்குவரத்து சீரமைப்பு
திருப்பூரில் ரோடு வசதி, வாகனங்கள் பெருக்கத்திற்கேற்ப இல்லை. பிரதான ரோடுகளில், ஏதாவது ஒரு இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், அனைத்து இடங்களிலும் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. சில இடங்களில் 'ஸ்மார்ட் சிட்டி' தொடர்பான பணிகள் நடந்து வருகிறது. போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் நடந்து வருவதை தடுக்க முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.
இதற்கு முன்பு இருந்த கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு பலவித எதிர்ப்புகளை மீறி, புஷ்பா சந்திப்பில் சிக்னல் இல்லாமல் (ப்ரீசிக்னல்) வாகனங்கள் செல்வதை அமல்படுத்தினார். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு சீராக வாகனங்கள் சென்று வருகின்றன. மாநகராட்சி சந்திப்பு போன்ற இடங்களில் மாற்றம் செய்ய சோதனை ஓட்டத்தை கையாண்டனர். ஆனால், மறைமுக எதிர்ப்புகளால் கிடப்பில் போட்டனர்.
குமார் நகரில் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டப்பட்டு, பணிகள் முடிந்த நிலையிலும், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு செல்ல மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். புதிய கட்டடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.