/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாய்ப்புகள் வருமா... வர்த்தகம் உயருமா? வங்கதேச விவகாரம்: நம்மை நோக்கி முதலீடுகள் நகரலாம்
/
வாய்ப்புகள் வருமா... வர்த்தகம் உயருமா? வங்கதேச விவகாரம்: நம்மை நோக்கி முதலீடுகள் நகரலாம்
வாய்ப்புகள் வருமா... வர்த்தகம் உயருமா? வங்கதேச விவகாரம்: நம்மை நோக்கி முதலீடுகள் நகரலாம்
வாய்ப்புகள் வருமா... வர்த்தகம் உயருமா? வங்கதேச விவகாரம்: நம்மை நோக்கி முதலீடுகள் நகரலாம்
ADDED : ஆக 18, 2024 11:24 PM

திருப்பூர்;''வளர்ந்த நாடுகள், வங்கதேசத்தில் நீண்டகால முதலீடு செய்வதை தள்ளிப்போடவும், அதற்கு பதிலாக இந்தியாவில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், ஆர்டர்கள் உடனடியாக நம்மை நோக்கி நகருமா என்று சொல்ல முடியாது'' என்கின்றனர் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்.
இந்தியாவுடன் நல்ல வர்த்தக உறவு நீடித்ததால், வங்கதேசம் அதிகளவு பயனடைந்தது. இருப்பினும், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், இந்தியாவை தாண்டி வளர்ச்சி பெற்றுள்ளது. உலக சந்தைகளை கையில் வைத்திருக்கும் சீனாவுக்கு அடுத்த இடத்தில் வங்கதேசம் இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அதிக அளவு ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கின்றன.
முன்னேறிய வங்கதேசம்
ஆயத்த ஆடை ஏற்றுமதியில் வங்கதேசம் இரண்டாமிடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும் இருக்கின்றன. காரணம், சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகள், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் அதிகம் முன்னேறிவிட்டன.
இந்தியா பருத்தி நுால் பின்னலாடை உற்பத்தியை மட்டுமே நம்பியிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டுமே, பின்னலாடை நிறுவனங்கள், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் கால்பதித்து வருகின்றன.
மாதம் ரூ.30,000 கோடி
வங்கதேசம், மாதம் ஒன்றுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் செய்கிறது. நமது நாட்டில் இருந்து, 11 ஆயிரம் கோடி முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடை மட்டுமே ஏற்றுமதியாகிறது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு குழப்பத்தால், அந்நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் பெரிய பாதிப்பு இருக்காது; படிப்படியாக ஆர்டர்கள் இந்தியாவுக்கு மாறவும் வாய்ப்புள்ளதாக ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி செலவு குறைவு
அந்நாட்டின் ஆயத்த ஆடை உற்பத்திச்செலவு, நம் நாட்டு உற்பத்திச்செலவை காட்டிலும், 20 சதவீதம் குறைவு. இதன் காரணமாக, ஆர்டர்கள் உடனடியாக இந்தியாவை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்க முடியாது. வளர்ந்த நாடுகள், வங்கதேசத்தில் நீண்டகால முதலீடு செய்வதை தள்ளிப்போடவும், அதற்கு பதிலாக இந்தியாவில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் மட்டுமே போராட்டம் இருந்தது; மற்ற இடங்கள் அமைதியாக இருப்பதாக கூறுகின்றனர். இதனால், வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு இருக்காது என்றே ஆணித்தரமாக கூறுகின்றனர்.
திருப்பூருக்கு ஒரு திருப்பம் வரும்
வங்கதேசம் - ஐரோப்பிய நாடுகள் இடையேயான, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், 2025ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு பிறகு, இந்தியாவுடன் அந்த வாய்ப்பு தேடிவரும். உலக நாடுகள் மத்தியில், பசுமை சார் உற்பத்தி என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. திருப்பூர், பசுமை சார் உற்பத்தியில் முன்னோடியாக இருப்பதால், திருப்பூருக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் தொழில்துறையினர் கூறுகின்றனர்.
------
மாதம்தோறும் ஆடை ஏற்றுமதி
வங்கதேசம் - ரூ.30 ஆயிரம் கோடி
இந்தியா - ரூ.12 ஆயிரம் கோடி
-------