/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளிர்கால ஆர்டர் திருப்பூருக்கு கைகொடுக்குமா? காத்திருக்கும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்
/
குளிர்கால ஆர்டர் திருப்பூருக்கு கைகொடுக்குமா? காத்திருக்கும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்
குளிர்கால ஆர்டர் திருப்பூருக்கு கைகொடுக்குமா? காத்திருக்கும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்
குளிர்கால ஆர்டர் திருப்பூருக்கு கைகொடுக்குமா? காத்திருக்கும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்
ADDED : ஏப் 28, 2024 02:02 AM
திருப்பூர்;நீண்ட இடைவெளிக்கு பின், கோடைக்கால ஆர்டர் வந்தது போல், குளிர்கால ஆர்டர்களும் திருப்பூருக்கு கை கொடுக்குமென, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி கேந்திரமாக விளங்குகிறது திருப்பூர். மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், நாட்டில் 55 சதவீத பங்களிப்புடன் வளர்ந்த நகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உட்பட, வளர்ந்த நாடுகளுக்கு, நம் நாட்டில் இருந்து, ஆண்டுக்கு 55 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது.
சர்வதேச அளவிலான பணவீக்கம், வளர்ந்த நாடுகளையும் உலுக்கியது. இயல்பான வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக, முழுவீச்சில் தயாராக இருந்த திருப்பூருக்கான, பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர் வரத்து தடைபட்டது.
கடந்த, 2022 ஆக., மாதம் துவங்கி அக்., வரையில் ஏற்றுமதி சரிந்தது. அடுத்த மூன்று மாதங்கள், ஏற்றுமதி இயல்பு நிலையை அடைந்தது. அதன்பின், 2023 பிப்., மாதம் துவங்கி, தொடர்ச்சியாக  12 மாதங்களில், வழக்கமான ஏற்றுமதி வர்த்தகம் சரிவடைந்தது.
அதிகபட்சமாக, 2022 மார்ச்சில் மட்டும், 13 ஆயிரத்து, 271 கோடி ரூபாய்க்கு, நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்தது. அடுத்து, 12 மாதங்களுக்கு பின், கடந்த பிப்., மற்றும் மார்ச் மாத ஆயத்த ஆடை ஏற்றுமதி உயர்ந்துள்ளது.
இறக்குமதி நாடுகளில், ஆயத்த ஆடைக்கான தேவை அதிகரித்ததால், கோடைக்கால ஆர்டர்கள் திருப்பூருக்கு அதிகம் கிடைத்தது. அதேவேகத்தில், குளிர்கால ஆர்டர்களும் வந்துசேர்ந்தால், திருப்பூர் மீண்டும் பழைய நிலையை அடையும். இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,'' நீண்ட சோதனைகளை கடந்து, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது. கோடைக்கால ஆர்டர்கள், திருப்பூருக்கு கை கொடுத்ததால், நீண்ட நாட்களுக்கு பிறகு, பிப்., - மார்ச் மாத ஏற்றுமதி அதிகரித்தது. அதேவேகத்தில், குளிர்கால ஆர்டர்களும் வந்து கொண்டிருக்கிறது; வர்த்தக விசாரணை முடிந்து, ஆர்டர் ஒப்பந்தம் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் திருப்பூர் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ளது,'' என்றார்.

