/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளி விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு; சீசன் தோறும் தொடரும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
/
தக்காளி விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு; சீசன் தோறும் தொடரும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
தக்காளி விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு; சீசன் தோறும் தொடரும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
தக்காளி விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு; சீசன் தோறும் தொடரும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
UPDATED : ஆக 23, 2024 06:23 AM
ADDED : ஆக 23, 2024 12:54 AM

உடுமலை; உடுமலை பகுதிகளில் தக்காளி வரத்து அதிகரித்து, விலை தொடர் சரிவை சந்தித்து வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை பகுதிகளில், அனைத்து பருவங்களிலும், ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் விளையும் தக்காளி, உடுமலை சந்தை மற்றும் தனியார் ஏல மையங்கள் வாயிலாக, கேரளா மாநிலம், மூணாறு, மறையூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது, உடுமலை பகுதிகளில் இதன் சீசன் களை கட்டியுள்ள நிலையில், தொடர் மழை, வரத்து அதிகரிப்பால் கடும் விலை சரிவு உள்ளிட்ட காரணங்களினால், நடப்பு பருவத்தில் இதை நடவு செய்த விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
கடந்த மே மாதம், தக்காளி நடவு செய்த போது, 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, ரூ.1,100 ரூபாய் வரை ஏலம் போனது. ஜூலை மாதம் வரை, ஒரு பெட்டி, ரூ.700 வரை ஏலம் போனது.
தற்போது, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளிலிருந்து, தினமும் ஒரு லட்சம் பெட்டிகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வரத்து அதிகரிப்பு காரணமாக, தக்காளி விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. நேற்று, ஒரு பெட்டி, 200 முதல், அதிகபட்சமாக தரமான காய், ரூ.250க்கு விற்பனையானது. திடீர் விலை சரிவு காரணமாக, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
தக்காளி சாகுபடிக்கு, உழவு, நாற்று, அடியுரம், களைக்கொல்லி, இரு முறை உரம் வைத்தல், 10 நாட்களுக்கு ஒரு முறை மருந்து அடித்தல் என, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கிறது.
நடவு செய்த, 60 நாட்களில், காய்ப்புக்கு வந்து, 30 நாட்கள் வரை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு சராசரியாக, 1,500 முதல் 2 ஆயிரம் பெட்டிகள் மகசூல் கிடைக்கும்.
அறுவடை துவங்கி வரத்து அதிகரித்த நிலையில், விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி, 200 ரூபாய் வரை விற்கிறது. செடியிலிருந்து காய் பறிக்க, ஒரு நபருக்கு கூலியாக, 400 ரூபாய் கொடுக்க வேண்டும்.
அறுவடை கூலி, போக்குவரத்து கட்டணம், பெட்டிக்கு, 10 ரூபாய், சந்தையில் கமிஷன் என, தக்காளி பறித்தால், கையிலிருந்து காசு செலவு செய்ய வேண்டியுள்ளது. அதிலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், 20 முதல், 30 சதவீதம் தக்காளி அழுகி வீணாகி வருகிறது.
எனவே, வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகளும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவடை செய்யும் தக்காளிக்கான விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
வரத்து அதிகரிக்கும் போது, விலை கிடைக்கும் வரை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில், குளிர் பதன கிடங்கு வசதி செய்து தர வேண்டும்.
உடுமலை பகுதிகளில், தக்காளி சாகுபடி அபரிமிதமாக உயர்ந்துள்ள நிலையில், தக்காளி சாஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அதிகாரிகளும், அரசும் கண்டு கொள்ளாததால், விளைவித்த தக்காளி முழுவதும் வீணாகி வருகிறது.
எனவே, தமிழக அரசு உடுமலை பகுதிகளில் அதிகரித்துள்ள தக்காளி சாகுபடிக்கு ஏற்ப, விரிவான ஆய்வு செய்து, சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.