/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அமையுமா?
/
மங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அமையுமா?
ADDED : பிப் 26, 2025 11:46 PM

திருப்பூர்:''மங்கலத்தில் சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்'' என்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.
நேர்முக உதவியாளர் கனகராஜ் வரவேற்றார். விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை விளக்கி பேசிவிட்டு,ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்தனர்.
தார் சாலை தேவை
அப்புசாமி, செயலாளர், திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்:
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி பச்சாம்பாளையம் மண் ரோடு, பொங்குபாளையம் ஊராட்சி பகுதி வழியாக சென்று, பல்வேறு ரோடுகளை இணைக்கிறது. அதிக மக்கள் பயன்படுத்தும் ரோடு, குண்டும், குழியுமாக இருக்கிறது; மண் ரோட்டை, தார்ரோடாக தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும்.
பொன்னுசாமி, தலைவர், மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் சங்கம்:
மங்கலம், ஆண்டிபாளையம், இடுவாய் மற்றும் பல வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்கள், பத்திரப்பதிவுக்காக, 15 கி.மீ., தொலைவில் உள்ள நெருப்பெரிச்சல் பதிவுத்துறை இணை பதிவாளர் அலுவலகம் சென்று வருகின்றனர்.
முறையான பஸ் வசதியும் இல்லாததால், சிரமம் ஏற்படுகிறது. 63 வேலம்பாளையம், மங்கலம், ஆண்டிபாளையம், இடுவாய், பூமலுார் உள்ளிட்ட கிராமங்களை இணைத்து, மங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.
சிவப்பு நிறத்தில் நீர்
கிருஷ்ணசாமி, விவசாயி:
முத்தணம்பாளையம் கிராமம், புதுப்பாளையத்தில் உள்ள எனது தோட்டத்தில் ஆழ்துளை கிணறு உள்ளது; சில வாரங்களாக, கிணற்று தண்ணீர் சிவப்பு நிறத்தில் வருகிறது. மாசுக்கட்டுப்பாடு வாரியம், தண்ணீரை பகுப்பாய்வு செய்து, கழிவு எதுவும் இல்லை என்று கூறிவிட்டது.
குடிநீர் வடிகால் வாரியமும் ஆய்வு செய்துள்ளது. கிணற்றில், சிவப்பு நிறத்தில் தண்ணீர் வருவதால் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவாக ஆய்வு செய்து, நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.