/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளிருக்கு தேவை நிதி சுதந்திரம்!
/
மகளிருக்கு தேவை நிதி சுதந்திரம்!
ADDED : மார் 07, 2025 11:08 PM
''அரசு கல்லுாரியில் உதவி பேராசிரியர் பணி; கைநிறைய சம்பளம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு. அதையெல்லாம் உதறி, ஆடை தயாரிப்பு மற்றும் விற்பனை துறையில், 'வால்ரஸ்' என்ற நிறுவனத்தை ஒரு அடையாளமாக மாற்றி யிருக்கிறார், அதன் உரிமையாளர் அனிதா டேவிட்.
தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார்...
பெண்கள், தொழில் முனைவோராகும் போது, சுற்றிலும் எதிர்மறை எண்ணங்கள் தான் பரவிக்கிடக்கும். அதனை நேர்மறையானதாக மாற்ற வேண்டும். விமர்சனங்களை கண்டுக்கொள்ள கூடாது; அதை தாங்கிக் கொண்டு, மேலெழும்பி வர வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரை, பெண்களுக்கான பாலியல் சம உரிமை தொடர்பான பிரச்னை இருந்துக் கொண்டே தான் இருக்கும். அதனை தவிர்ப்பதற்கான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வருமானம் ஈட்டும் பெண்களுக்கு நிதி சுதந்திரம் வழங்க வேண்டும். மன அழுத்தம் என்பது, தவிர்க்க முடியாதது என்ற போதிலும், அதை சமாளிக்கும் ஆற்றல் பெற வேண்டும். பெண்களின் இளம் வயது திருமணம், தவிர்க்கப்பட வேண்டும்; அவர்கள் கல்வி கற்க வேண்டும். தங்களை சுற்றியுள்ள சூழ்நிலையை, தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.
நான் என் படிப்பை முடித்து, தனியார் பள்ளி ஆசிரியையாக பணியை துவக்கினேன். பி.எஸ்.சி., படிப்பில், பல்கலை அளவில், 5வது ரேங்க்; எம்.எஸ்.சி.,யில் பல்கலை 2வது ரேங்க். எம்.பில்., படிப்பில் 'கோல்டு மெடல்' வாங்கினேன். அதன்பின், பி.எச்.டி., முடித்தேன். ஒரு அரசுக் கல்லுாரியில் உதவி பேராசிரியராக கைநிறைய சம்பளத்தில் பணிபுரிந்து வந்தேன்.
அமெரிக்கா, சிங்கப்பூரிலும் எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை காத்திருந்தது. திருமணத்துக்கு பின், அரசுப்பணியை ராஜினாமா செய்து, என் கணவர் நடத்தி வந்த 'வால்ரஸ்' பேப்ரிக் நிறுவனத்தை கவனித்துக் கொண்டேன். கடந்த, 4 ஆண்டாக எனது முழுப்பொறுப்பில் ஆயத்த ஆடையகம் நடத்தி வருகிறேன். 10 வாடிக்கையாளர்களுடன் துவங்கிய என் வியாபாரம், இன்று, 1,000க்கும் மேற்பட்டோருடன் வர்த்தகம் நடக்கிறது. கடின உழைப்பு, வியாபாரத்தில் நேர்மை ஆகியவை தான், வெற்றிக்கு காரணம். இவ்வாறு, அவர் கூறினார்.