/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பெண் பயணிகள் பாதுகாப்பு குழு' துவக்கம்!
/
'பெண் பயணிகள் பாதுகாப்பு குழு' துவக்கம்!
ADDED : மார் 14, 2025 12:47 AM

திருப்பூர்; திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், வளாகம், ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகள் பாதுகாப்புக்கு, திருப்பூர் ரயில்வே போலீசார், 'பெண் பயணிகள் பாதுகாப்பு குழு' ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதற்கான 'வாட்ஸ்ஆப் எண்' வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று நடந்தது. எஸ்.ஐ., சிவசுப்ரமணியம் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, போத்தனுார் சரக இன்ஸ்பெக்டர் ருவந்திகா பேசுகையில், ''ரயிலில் தனியே பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு தர பெண்கள் பயணிகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டியில் உடன் பயணிப்பவர் குறித்த சந்தேகம் இருந்தால், உடனடியாக, 99625 00500 என்ற உதவி எண்ணுக்கு பெண்கள் அழைக்கலாம். அடுத்த ரயில்வே ஸ்டேஷன் வருவதற்குள் உங்கள் குடும்ப உறுப்பினரில் ஒருவராக நாங்கள் அங்கு இருப்போம்; தன்னம்பிக்கையாக எதிர்கொள்ளுங்கள்; பயப்பட வேண்டாம். உதவிக்கு, 24 மணிநேரமும் ஆறு பெண் போலீசார் இருப்பர்,'' என்றார்.
வாட்ஸ்அப் குழு
ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள், திருப்பூர் வந்து செல்லும் ரயில்களில் வழக்கமாக பயணிக்கும் பயணிகள், சீசன் பாஸ் பெற்றுள்ள பெண் பயணிகள், மாவட்ட அதிகாரிகள், அரசு ஊழியர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து 'பெண் பயணிகள் புதிய வாட்ஸ்அப் குழு' உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழுவுக்கு வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
அதிகம் பேர் இணைய வேண்டும்
ஒரு வாட்ஸ்அப் குழுவில் ஆயிரக்கணக்கானோரை இணைக்கும் வசதி உள்ள நிலையில், குறைந்தபட்ச நபர்களை மட்டுமே பிரத்யேக குழுவில் இணைத்துள்ளனர். ஹிந்தி பேசும் வடமாநிலத்தவருக்கு தமிழில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஹிந்தி தெரிந்தவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்து வதுடன், வடமாநிலத்தவர் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் ஹிந்தியிலும் பிளக்ஸ் இடம் பெற வேண்டும். 'வாட்ஸ்அப் நம்பர் லிங்க்' அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஸ்டேஷன் 'டிஸ்பிளே' வில் ஒளிபரப்பினால், அனைத்து தரப்பு பெண்களும் 'பெண் பயணிகள் பாதுகாப்பு குழு'வில் இணைந்து கொள்வர். ரயில்வே போலீசார் ஒருங்கிணைக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் முடியும்.