ADDED : ஏப் 27, 2024 11:33 PM
''பெண்களின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரும் கீழே விழக்கூடாது. ஆனால், இன்று பல்வேறு பிரச்னைகள், சங்கடங்கள் என, பெண்கள் கண்ணீர் விடும் நிலை உள்ளது'' என்று சொல்கிறார் காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர்.
பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், 14ம் ஆண்டு விழா, திருவிளக்கு வழிபாடு மற்றும் மழை வேண்டி வருன மூல மந்திர வேள்வி ஆகிய முப்பெரும் விழாவில் பங்கேற்ற பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது:
நல்லது எது, கெட்டது எது என்பதை நாம்தான் தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மா, தனது மனைவியான சரஸ்வதிக்கு நாவிலும், சிவன் தனது உடலில் பாதியை தனது மனைவிக்கும், விஷ்ணு தனது மார்பில் மனைவிக்கும் இடம் அளித்துள்ளனர். பெண்களின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரும் கீழே விழக்கூடாது. ஆனால், இன்று பல்வேறு பிரச்னைகள், சங்கடங்கள் என, பெண்கள் கண்ணீர் விடும் நிலை உள்ளது.
உலகம் முழுவதும் நிலவி வரும் கடும் வெப்பம், கடல் நீர் சூழ்ந்து ஏற்படும் அழிவு, சிறுத்தை நகருக்குள் வருவது, கொசுக்களால் பிரச்னை என, உலகம் முழுவதும் எண்ணற்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன.
முன்னோர் காலத்தில் இவ்வளவு பிரச்னைகள் இருந்ததா என்பதை யோசிக்க வேண்டும். சமுதாயத்தில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் நாம் தான் காரணம். இவ்வுலகில் நிலவும் பிரச்னைகளில் இருந்து விடுபட இறைவனை சரணடைவது ஒன்றே தீர்வு.
இவ்வாறு அவர் பேசினார்.
மழை வேண்டி சிறப்பு வேள்வி வழிபாடு, தொடர்ந்து நவகிரக வேள்வி, பிரார்த்தனை நடந்தது. திருவிளக்கு வழிபாடு நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

