/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் மறு பயன்பாடு
/
தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் மறு பயன்பாடு
ADDED : பிப் 15, 2025 07:22 AM
திருப்பூர்; 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில், தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி முறையில், மறுபயன்பாடு செய்யப்படுவதாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி மாநாட்டில் பேசினர்.
'பாரத் டெக்ஸ் -2025' கண்காட்சி, புதுடில்லி பாரத் மண்டபத்தில் நேற்று துவங்கியது. சர்வதேச ஜவுளி கண்காட்சியை பார்வையிட, 120 நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தக முகமைகள் வந்துள்ளன. திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி திறமைகளையும், சாதனைகளையும் காட்சிப்படுத்த ஏதுவாக, 40 ஏற்றுமதி நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொதுசெயலாளர் திருக்குமரன், துணை தலைவர்கள் இளங்கோவன், ராஜ்குமார், இணை செயலாளர் குமார்துரைசாமி ஆகியோர், மத்திய ஜவுளித்துறை செயலர் நீலம் ஷமி ராவ், தமிழக ஜவுளித்துறை இயக்குனர் லலிதா உள்ளிட்டோருடன், கண்காட்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பங்களிப்பு குறித்து விவரித்தனர். தொடர்ந்து நடந்த, தொழில் வர்த்தகர்கள் கலந்தாய்வு மாநாட்டில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
நீடித்த நிலைத்தன்மை குறித்த 'கிளஸ்டர்' அளவிலான மாநாட்டில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது:
திருப்பூரில் செய்யப்படும் நிலையான நடைமுறைகளில்,'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் முக்கியமானது.
சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில், தினமும், 13 கோடி லிட்டர் கழிவுநீரை மறுசுழற்சி முறையில் சுத்திகரித்து, 10 கோடி லிட்டர் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
காற்றாலைகள் மூலம் 2,000 மெகாவாட் மற்றும் சூரிய சக்தி மூலம் 250 மெகாவாட் உற்பத்தி செய்கிறோம். பின்னலாடை தொழிற்சாலைகளுக்கு, 350 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்துகிறோம், மீதமுள்ள மின்சாரம் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு வழங்கப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, சரியான திட்டமிட்டலுடன் பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.