/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலிபிளவர் 10 ரூபாய்; கூவிக்கூவி விற்பனை
/
காலிபிளவர் 10 ரூபாய்; கூவிக்கூவி விற்பனை
ADDED : பிப் 09, 2025 12:57 AM
திருப்பூர் : பனியால் விளைச்சல் அதிகரித்து, வரத்து கூடியுள்ளதால், காலிபிளவர் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது; ஒரு காலிபிளவர் சந்தையில், பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வழக்கமாக, தெற்கு உழவர் சந்தைக்கு, குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே காலி பிளவர் விற்பனைக்கு கொண்டு வருவர். நேற்று, 20 விவசாயிகள் காலிபிளவர் கொண்டு வந்திருந்தனர். இதனால், 700 கிலோ காலிபிளவர் வரத்தாக இருந்தது.
வழக்கமாக பெரிய அளவு காலி பிளவர், 35 - 50 ரூபாய்க்கும், சிறியது, 20 - 25 ரூபாய்க்கும் விற்கப்படும். நேற்று வரத்து அதிகரிப்பால், பெரியது, 25 ரூபாய்க்கும், சிறியது, பத்து ரூபாய்க்கும் விற்றது.
காலிபிளவர் விலை குறைவால், 'சில்லி - 65' தயாரிப்புக்கு மொத்த வியாபாரிகள் பலரும் மூட்டையாக காலிபிளவர் வாங்கிச் சென்றனர். காய்கறி வியாபாரிகளும் கூடுதலாக வாங்கிச் சென்றனர்.
வழக்கமாக ரோட்டோர கடைகளில் காலிபிளவர் மொத்தமாக விற்பனை இருக்காது. விலை குறைவால் நேற்று ஆங்காங்கே கூவிக்கூவி விற்கப்பட்டது.
கூடுதல் விலை கிடைக்காவிட்டாலும், கொண்டு வந்தவை விற்றுத் தீர்ந்ததால், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

