/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
100 சதவீத தேர்ச்சி: பறிகொடுத்த பள்ளிகள்
/
100 சதவீத தேர்ச்சி: பறிகொடுத்த பள்ளிகள்
ADDED : மே 09, 2025 11:45 PM
திருப்பூர்: பிளஸ் 2 தேர்வு முடிவில் கடந்த முறை நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்த, ஒன்பது பள்ளிகள், இம்முறை, சென்டம் ரிசல்ட்டை தவற விட்டுள்ளன.
உத்தமபாளையம், குளத்துப்பாளையம், அலங்கியம், ஜல்லிபட்டி, கொடுவாய், சரவணபுரம், குன்னத்துார் , தேவனுார்புதுார், பெரியவளவாடி ஆகிய ஒன்பது பள்ளிகள், கடந்த முறை நுாற்றுக்கு நுாறு தேர்ச்சி பெற்றுள்ளன. ஆனால், இம்முறை சாதனை படைக்க முடியவில்லை.
கடந்த முறை, நுாறு சதவீதம் தேர்ச்சியை தந்த உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்முறை, 53 மாணவர், 43 மாணவியர் என, 96 பேர் தேர்வெழுதியுள்ளனர். மாணவ, மாணவியரில் தலா இருவர் வீதம், நான்கு பேர் தேர்ச்சி பெறாததால், இப்பள்ளி, ஐந்து சதவீத தேர்ச்சி குறைந்து, 95.83 சதவீதம்.
குளத்துப்பாளையம் பள்ளியில், தேர்வெழுதிய, 21 மாணவியரும் தேர்ச்சி பெற்று விட்டனர். 27 மாணவர்களில், இருவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால், கடந்த முறை பெற்ற நுாறு சதவீதம், இம்முறை, 95.83 ஆக குறைந்து விட்டது. அலங்கியம் பள்ளி, 2024ல் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது. இம்முறை, 45 மாணவர், 24 மாணவியர் என, 69 பேர் தேர்வெழுதினர். ஒரு மாணவி, நான்கு மாணவர் என ஐந்து பேர் தேர்ச்சி பெறவில்லை. இதனால், 92.75 சதவீதம் பெற்றுள்ளது.
ஜல்லிபட்டி பள்ளியில், 11 மாணவர், 17 மாணவியர் என, 28 பேர் தேர்வெழுதினர்; மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டனர்; ஒரு மாணவர் தேர்ச்சி பெறாததால், கடந்த முறை, 100 சதவீத தேர்ச்சியை தந்த இப்பள்ளி, இம்முறை, 96.43 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கொடுவாய் அரசு பள்ளியில், 70 மாணவர், 79 மாணவியர் என, 149 பேர் தேர்வெழுதினர்; நான்கு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதே நேரம், மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டனர். கடந்த முறை, நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற இப்பள்ளி, இம்முறை, 97.32 சதவீதம்.
கடந்த முறை, நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது, சரவணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி; இம்முறை, 42 மாணவரும் தேர்ச்சி பெற்று விட, 48 மாணவியரில் ஒருவர் மட்டும் தேர்வாகவில்லை. இதனால், நடப்பாண்டு தேர்ச்சி, 98.89 ஆக குறைந்துள்ளது.
குன்னத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 197 மாணவியர் தேர்வெழுதினர்; இருவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால், கடந்த முறை, நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்த இப்பள்ளி, இம்முறை, 98.98 சதவீதம்.
தேவனுார்புதுார் என்.ஜி.பி., பெண்கள் பள்ளி கடந்தாண்டு, நுாறு சதவீத தேர்ச்சியை தந்தது; இம்முறை, 95.45; தேர்வெழுதிய, 44 மாணவியரில் இருவர், தேர்ச்சி பெறவில்லை.
பெரியவாளவாடி நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளியில், மொத்தம், 52 பேர் தேர்வெழுதியுள்ளனர்; 28 மாணவியரும் தேர்ச்சி பெற்று விட்டனர்; 24 மாணவரில் ஒருவர் தேர்ச்சி பெறவில்லை; தேர்ச்சி சதவீதம், 98.08. கடந்தாண்டு இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சியை தந்தது, குறிப்பிடத்தக்கது.