ADDED : டிச 05, 2025 08:38 AM

திருப்பூர்: திருப்பூர் முதலிபாளையம் கிராமத்தில், 1,008 விளக்கேற்றி மக்கள் வழிபட்டனர்.
திருப்பூர், முதலிபாளையம் கிராமத்தில் உள்ள காலாவதியான பாறைக்குழியில், கடந்த, 10 ஆண்டுகளாக மாநகராட்சி சார்பில், குப்பைக்கழிவு கொட்டப்பட்டு வந்தது. அதோடு, அப்பகுதியில் உள்ள சாய ஆலைகளின் சாய கழிவு நீரும் மண்ணில் கலந்தது.
இதனால், மண் வளம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள விவரம், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டது. 'அங்கு குப்பைக் கொட்டக் கூடாது' என, அப்பகுதி மக்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து, இடைக்கால தடையுத்தரவு பெற்றுள்ள நிலையில், கார்த்திகை தீப திருநாளான நேற்று முன்தினம் இரவு, தெற்குபாளையம் மாரியம்மன் கோவில் வளாகத்தில், 1,008 விளக்கு ஏற்றி, வழிபட்டனர்.
'முதலிபாளையம் காப்போம்' என்ற வாசகத்தில் தீப விளக்குகள் ஒளிர்ந்தன. 'இயற்கை காப்பதே இறைவனுக்கு செய்யும் தொண்டு என்ற அடிப் படையில், இந்த வழிபாடு நடத்தினோம்' என, ஊர் மக்கள் கூறினர்.

