/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
108 ஆம்புலன்ஸ் சேவை: 'வாட்ஸ் ஆப்'பில் பெறலாம்!
/
108 ஆம்புலன்ஸ் சேவை: 'வாட்ஸ் ஆப்'பில் பெறலாம்!
UPDATED : மார் 08, 2026 06:26 AM
ADDED : மார் 08, 2026 06:09 AM

திருப்பூர்: தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் பொதுசுகாதாரத்துறை வாயிலாக, 108 ஆம்புலன்ஸ் இலவச சேவை மாநிலம் முழுதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது; மொத்தம், 1,353 ஆம்புலன்ஸ், 24 மணி நேரமும் உயிர்காக்கும் சேவையில் இறங்கி பணியாற்றி வருகிறது.
ஆம்புலன்ஸ் சேவையை, எளிதாகவும், விரைவாகவும் பெற, சுகாதாரத்துறையின் 94450 30725 என்ற வாட்ஸாப் எண்ணுக்கு,' ஹாய்' என ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும். உடனே புக் ஆம்புலன்ஸ் என்ற லிங்க் வரும். அதனை கிளிக் செய்தால், உங்கள் இருப்பிடம் கேட்கும்.
இருப்பிடத்தை பகிர்ந்த உடன், அவ்விடத்துக்கு அருகில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். புதிய வாட்ஸாப் செயலி வாயிலாக, விபத்து அல்லது நோயாளி காப்பாற்ற வேண்டிய இருப்பிடத்தை துல்லியமாக ஆம்புலன்ஸ் நிர்வாகத்துக்கு தெரிவிக்க முடியும்.
புதிய அல்லது அறிமுகமே இல்லாத இடமாக இருந்தாலும், இனி, வழியை தேடி முகவரி கேட்டு அலைய வேண்டி இருக்காது. அவசர உதவிக்கு அழைப்பவருக்கு உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனத்தின் எண், டிரைவர் எண் ஆகிய விபரங்களும் மெசேஜ்ஜாக அனுப்பி வைக்கப்பட்டு விடும். அத்துடன் ஆம்புலன்ஸ் எங்கிருந்து வருகிறது. வந்து சேரக்கூடிய நேரமும் தெரிவிக்கப்பட்டுவிடும்.
இதனால், நிகழ்விடத்தில் உள்ளவர், சிகிச்சை பெற வேண்டியவருக்கு அருகில் உள்ளவர் பதட்டம் இல்லாமல் இருக்க முடியும். தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் க்யூஆர்கோடு ஸ்கேன் செய்து, இந்த வாட்ஸாப் செயலிக்குள் வர முடியும்.
108 ஆம்புலன்ஸ் அதிகாரிகள் கூறுகையில், 'வாட்ஸாப் செயலியை பயன்படுத்துவதன் மூலம் நிகழ்விடத்தை மிக துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். நேரம் விரயம் இன்னமும் தவிர்க்கப்படும்.
திருப்பூரை பொறுத்த வரை, மாவட்டத்துக்குள், 11 நிமிடத்திலும், நகருக்குள், 9.30 நிமிடத்திலும் ஆம்புலன்ஸ் நிகழ்விடத்தை சென்றடைகிறது. இனி, இருப்பிடத்தை மிகத்துல்லியமாக அறிந்து கொண்டு, முன்னதாகவே சென்று சேர முடியும். வாட்ஸாப் செயலி வாயிலாக இணைவோர் உயிர்காக்கும் சேவைக்கு மட்டும், 108 ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும்,' என்றனர்.

