/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு எளிது
/
10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு எளிது
ADDED : ஏப் 03, 2025 05:48 AM

திருப்பூர்; 'பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு எளிதாக இருந்தது' என, தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
நேற்று, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஆங்கில தேர்வு நடந்தது. மாவட்டத்தில், 29 ஆயிரத்து 887 மாணவ, மாணவியர் தேர்வெழுதும் தகுதி பெற்றிருந்தனர்.
அவர்களில், 29 ஆயிரத்து 322 பேர் தேர்வெழுதினர்; 204 பேர் ஆங்கில தேர்வில் இருந்து விலக்கு பெற்றிருந்தனர்; 361 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த, 528 பேரில், 460 பேர் தேர்வெழுதினர்; 2 பேர் விலக்கு பெற்றிருந்த நிலையில், 66 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
மாணவர்கள் கூறியதாவது:
மணிவேல்: ஆங்கிலத் தேர்வு, ரொம்ப எளிதாக இருந்தது. சில வினாக்களை தவிர, மற்ற வினாக்கள் அனைத்தும், புத்தகத்தின் பின்பக்கத்தில் இருந்து தான் கேட்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் சுட்டிக்காட்டிய வினாக்கள், கேட்கப்பட்டிருந்தன.
அக்ஷயா: தேர்வு மிக எளிதாக இருந்தது. 'போயம்' பகுதி சற்று கடினமாக இருந்தாலும், விடையளிக்கும் வகையில் தான் இருந்தது. அனைத்து மதிப்பெண் வினாக்களுக்கும் விடைளிக்கும் வகையில் தான், கேள்வித்தாள் அமைந்திருந்தது; நேரம் தான் போதவில்லை.
கமலேஷ்: புத்தகத்தின் பின்பக்கத்தில் இருந்து தான் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன; மிக எளிதாக தேர்ச்சி பெற முடியும். முதல் பகுதி பாடங்களில் இருந்து அதிகளவு கேள்வி, கேட்கப்பட்டிருந்தது. ஆங்கில தேர்வு என்ற அச்சம், சுத்தமாக இல்லாமல் போனது.
அக்பர்: ஐந்து மதிப்பெண் வினாக்கள், சற்று குழப்பும் வகையில் இருந்தாலும், கடினம் என்று கூற முடியாது. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கும் வகையில் தான் வினாத்தாள் இருந்தது; நிச்சயம் அதிக மதிப்பெண் பெற முடியும்.
90 மார்க் எளிதாக பெறலாம்
ஆங்கில வினாத்தாள் பொதுவாக எளிதாகவே இருந்தது; 90 மதிப்பெண், எளிதாக எடுக்க முடியும். சில கேள்விகள், துணை பாடங்களில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. 'புளுபிரின்ட்' இல்லாததால், புத்தகத்தின் எந்த பகுதியில் இருந்தும் கேள்விகள் கேட்க முடியும். 'பேட்டன்' படி தான் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம். இதனால், மாணவர்கள் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடிந்தது.
- கல்பனா, ஆங்கில ஆசிரியை.
குமார்நகர் மாநகராட்சி பள்ளி.

