/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
11 ஆண்டுகள்... 25 லட்சம் மரக்கன்றுகள்
/
11 ஆண்டுகள்... 25 லட்சம் மரக்கன்றுகள்
ADDED : ஜன 04, 2026 04:44 AM

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின், 11வது ஆண்டு விழா, மங்கலம் மாதேசிலிங்கம் கோவில் அருகே நடந்தது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், 189 வகையான, 3,330 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட உள்ளன. அதற்காக, நேற்றைய விழாவில், மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.
மாநில திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் சிவராமன், கால்நடை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் புண்ணியமூர்த்தி, வெற்றி அறக்கட்டளை கவுரவ தலைவர் கோபாலகிருஷ்ணன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், அனிதா டெக்ஸ்காட் சந்திரசேகர், திருப்பூர் மேற்கு ரோட்டரி டிரஸ்ட் தலைவர் ஈஸ்வரன், ரோட்டரி தலைவர் ஆறுமுகன் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
முன்னதாக, திட்ட இயக்குனர் குமார் துரைசாமி வரவேற்றார். சுலோச்சனா காட்டன்ஸ் தலைவர் கண்ணன், ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் தமிழ்வாணன், செயல் அலுவலர் வளர்மதி, கல்குவாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் ராம், 'சிம்கா' தலைவர் விவேகானந்தன், மேற்கு ரோட்டரி டிரஸ்ட் செயலாளர் நடராஜ், பொருளாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
மண் வாழ வேண்டும் தமிழ்நாடு கால்நடை பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் புண்ணியமூர்த்தி: திருப்பூரில், 25 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது, எதிர்கால சந்ததியினரை வாழவைக்கும். கடந்த, 2021 மூலிகை மருத்துவ ஆய்வின் போது, பல்வேறு விவரங்களை அறிந்தேன். மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். இந்தியா முழுவதும் பார்த்திருக்கிறோம். திருப்பூரை போல் ஒற்றுமையுடன் கரம் கோர்த்து, மரம் வளர்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சிறிய செடி, மரம் இல்லாமல், உயிர்வாழ்வது சிரமம். கால்நடைகளை, பூச்சிக்கடி, பாம்புக்கடி, பூச்சி மருந்து, களை கொல்லி மருந்து சாப்பிட்டால், வெற்றிலை, மிளகு, உப்பு மூன்றையும் வைத்து அரைத்து, கண், காது, மூக்கில் விட்டால், கால்நடைகளின் உயிர்காக்க முடியும் என்றும் நிரூபித்துள்ளோம். தாவரம் வாழ வேண்டும்; மண் வாழ வேண்டும்.
நமது சந்ததியினர் வாழ வேண்டும் என்றால், கால் நடையை உள்ளடக்கிய வேளாண்மை நடக்க வேண்டும். கால்நடை சாணமும், நீரும் இருந்தால் தான் மண்ணின் நுண்ணுயிர் பாதுகாப்பாக இருக்கும்.
25 லட்சம் மரக்கன்று 'வெற்றி' அறக்கட்டளை கவுரவ தலைவர் கோபால கிருஷ்ணன்: வெற்றி அமைப்பு, 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆரம்பத்தில், மரம் வளர்ப்பு, திடக்கழிவு மேலா ண்மை என துவங்கியது. ஆண்டி பாளையம் குளம் பாதுகாப்பு, நல்லம்மன் தடுப்பணை, 60 லட்சம் ரூபாயில் சீரமைப்பு, இடுவம்பாளையத்தில் அரசு பள்ளி, வேளாண் பயற்சியகம் என தொடர்ந்து சேவையாற்றி வருகிறோம். 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 11 ஆண்டுகளில், 25 லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடித்துள்ளோம்; இது, விரைவில், 50 லட்சமாக உயரும். மாநகராட்சியுடன் இணைந்து, சின்னக்காளிபாளையத்தில் மூங்கில் பூங்கா அமைத்து கொடுத்துள்ளோம்.
பாராட்டும் வர்த்தகர்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்: திருப்பூரில் எப்படி, 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, மரமாக வளர்க்க முடிந்தது என, வெளிநாட்டு வர்த்தகர்கள் வியந்து பாராட்டுகின்றனர். 'வெற்றி' அமைப்பினர் மரம் வளர்த்ததால், ஏற்றுமதியாளருக்கு சர்வதேச அரங்கில், 'பசுமை திருப்பூர்' என்ற அங்கீகாரம் கிடைத்து வருகிறது. வனத்துக்குள் திருப்பூர் திட்ட வளர்ச்சிக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், என்றென்றும் துணை நிற்கும்.
மக்கள் இயக்கமாக... ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன்: திருவாதிரை நட்சத்திரத்திர நாளில், ஆருத்ரா தரிசனத்தின் போது, அரிய வகையிலான மரக்கன்றுகளை நட்டு வைப்பது, இறையருளை கூட்டுவிக்கும். திருப்பூர் மேற்கு ரோட்டரியும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. கடந்த, 11 ஆண்டுகளாக இயங்கி வரும் வனத்துக்குள் திருப்பூர் திட்டம், மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு மரத்தின் பாதுகாப்புக்காக மக்கள் இயக்கம் உருவாக்க வேண்டும். மரம் வளர்ப்பு என்பது, புண்ணியம், தர்மம் என்றெல்லாம் கூற முடியாது. நமது முன்னோர்களிடம் நாம் வாங்கிய கடன். அதனை பூமிக்கு முறையாக திருப்பி செலுத்த வேண்டும்.
அரியவகை மரங்கள் 'வெற்றி' அறக்கட்டளை தலைவர் சிவராம்: அழியும் நிலையில் உள்ள, 186 அரிய வகை மரக்கன்று, நட்டு வைத்துள்ளோம். அவை பாதுகாப்பாக வளர்க்கப்படும். தலைமுறை கடந்து பயனளிக்க வேண்டும் என்பதால், 25 லட்சமாவது மரங்களை, தேடிப்பார்த்து தெளிவாக தேர்வு செய்துள்ளோம்.
திருப்பூர் மேற்கு ரோட்டரி சமூக சேவையில் முன்னோடியாக விளங்குகிறது. மொத்தம், 25 லட்சம் மரங்களில், ஒரத்துப்பாளையம் அணையிலும், 100 ஏக்கரில் மரக்கன்று நட்டு வைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சாக்கடை கழிவுநீரால், ஆற்றின் டி.டி.எஸ்., அதிகமாக இருக்கிறது. கோவை மற்றும் உள்ளாட்சிகளில் சுத்திகரித்து ஆற்றில் விடும் போது, தண்ணீரின் மாசுபாடு குறையும். தன்னார்வலர், தொழில்துறையினர் தாரளமாக இப்பசுமை சேவையில் இணைந்து பயணிக்கின்றனர்.
வெற்றி அமைப்புக்கு, ஆண்டிபாளையம் குளம் ஓர் மைல். இடுவம்பாளையம் பள்ளி இரண்டாவது மைல்கல்; 12 ஏக்கர் மூங்கில் பூங்கா, மூன்று கோடி ரூபாயில் அமைத்துள்ளோம். வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 25 லட்சம் மரக்கன்றுகள் நட்டாலும், மரம் வளர்ப்பு என்ற பசுமை பணி தொடரும், என்றார்.
'சைமா' தலைவர் சண்முகசுந்தரம், 'ஆம்ஸ்ட்ராங்' பழனிசாமி, 'பிரித்வி' நிறுவன உரிமையாளர் பாலன், மாதேசிலிங்கம் கோவில் செயல் அலுவலர் வளர்மதி பேசினர்.

