ADDED : மே 22, 2025 03:43 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல்நாள் ஜமாபந்தியில், பொதுமக்களிடமிருந்து மொத்தம், 1,178 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் மீது உடனடி தீர்வு ஏற்படுத்தி, மக்களின் நம்பிக்கையை காப்பது அதிகாரிகளின் கடமை.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நேற்றுமுன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் ஜமாபந்தியில் பங்கேற்று, பட்டா மாறுதல், உட்பிரிவு, நில அளவை கோரிக்கை, நகல் பட்டா, இலவச வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு கேட்டும், சாலை வசதி, பஸ் வசதி உள்பட பல்வேறு பொது பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கோரியும் மனு அளிக்கின்றனர்.
திருப்பூர் வடக்கு தாலுகா - 40,திருப்பூர் தெற்கு - 60, பல்லடம் - 131, அவிநாசி - 191, காங்கயம் - 114, தாராபுரம் - 230, ஊத்துக்குளி - 75, உடுமலை - 124, மடத்துக்குளம் - 213 என, மொத்தம், 1,178 மனுக்களை முதல் நாளில் பொதுமக்கள் அளித்துள்ளனர்.
இன்றுடன் நிறைவு
திருப்பூர் வடக்கு தாலுகாவில், இரண்டு பிர்காக்களே உள்ளன. இன்று வேலம்பாளையம் பிர்காவோடு, ஜமாபந்தி முடிவடைகிறது. அதேபோல், ஊத்துக்குளி, மடத்துக்குளம் தாலுகாக்களிலும் இரண்டாவது நாளான இன்றோடு நிறைவடைகிறது. திருப்பூர் தெற்கு தாலுகாவில் நாளையும், அவிநாசி, பல்லடம், காங்கயம் தாலுகாக்களில், வரும், 27ம் தேதி, உடுமலையில், 28ம் தேதி, தாராபுரத்தில், வரும் 30ம் தேதியுடன் ஜமாபந்தி முடிவடைகிறது.
தீர்வு காண்பதே மேல்
கலெக்டர் தலைமையில், வாரந்தோறும் திங்கள்கிழமை, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த 19ம் தேதி நிலவரப்படி, குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கப்பட்டவற்றில், இன்னும் 2,180 மனுக்கள் நிலுவையில் உள்ளன. அவற்றில், 15 நாட்களுக்கு உட்பட்ட, 1,116 மனுக்கள்; 16 நாட்களுக்கு மேல் 30 நாட்களுக்கு உட்பட்ட 814 மனுக்களும்; ஒரு மாதத்துக்கு மேல் மூன்று மாதத்துக்கு உட்பட்ட 215 மனுக்களும் நிலுவையில் உள்ளன. மூன்று மாதங்களை கடந்த, 13 மனுக்களும்; ஆறு மாதங்களை கடந்தும் தீர்வு காணப்படாமல் 16 மனுக்களும் உள்ளன.
ஆண்டுதோறும் சம்பிரதாயமாக நடக்கும், ஜமாபந்தியில் அளிக்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவர். தங்கள் பிரச்னைக்கு விரைந்து தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், மக்கள் மனு அளிக்கின்றனர். வழக்கம்போல் மனுக்களை நிலுவையில் வைக்காமல், உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும்