/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரே நாளில் 1.50 லட்சம் பேர் பயணம்
/
ஒரே நாளில் 1.50 லட்சம் பேர் பயணம்
ADDED : அக் 30, 2024 09:10 PM

திருப்பூர்,; சிறப்பு பஸ்கள் இயக்கம் மூலம் திருப்பூரில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.50 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றனர். நேற்று நாள் முழுதும் பஸ்களில் கூட்டம் அதிகரித்திருந்தது.
இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, கடந்த, 28ம் தேதி இரவு முதல் சிறப்பு பஸ் இயக்கம் துவங்கியது. திருப்பூரில் இருந்து மதுரைக்கு, 110, திருச்சிக்கு, 170, தேனிக்கு, 40, சேலத்துக்கு, 30 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டது.
முதல் நாளில் கூட்டம் குறைவாக இருந்தாலும், நேற்று முன்தினம் மாலை முதல் பஸ் ஸ்டாண்ட்களில் கூட்டம் அதிகரித்தது. பெரும்பாலான தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறையும், அரசு பள்ளிகள் அரை நாள் விடுமுறையும் விட்டதால், பலர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு பயணமாக 'லக்கேஜ்' உடன் வீட்டில் இருந்து அதிகாலையிலேயே கிளம்பினர்.
தயாராக இருந்த போக்குவரத்து கழகம், நேற்று அதிகாலை 5:00 மணி முதல் முழு அளவில் சிறப்பு பஸ் இயக்கத்தை துவக்கியது. நேற்று முன்தினம் இரவே கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்ட மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி பஸ்களில் இருக்கைகள் முழுமையாக நிறைந்தன.
சிறப்பு பஸ்களாகடவுன் பஸ்கள்
நல்ல நிலையில் இயங்கிய டவுன்பஸ்கள், இரவு, 10:00 மணிக்கு பின் சிறப்பு பஸ்களாக மாற்றப்பட்டது. நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்து பயணிகள் வந்து கொண்டிருந்தனர். மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சேலம், திருவண் ணாமலை, அரூர், திருப்பத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு எதிர்பார்த்த கூட்டம் நேற்றுமுன்தினம் இல்லை.
புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், அருப்புக்கோட்டை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை வழியாக பயணிக்கும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிறைந்திருந்தது.
நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை, திருப்பூரில் இருந்து, 1.50 லட்சம் பேர் வெளியூர் பயணித்திருப்பர். நேற்று நாள் முழுதும் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தேனிக்கு அதிக பேர் பயணித்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில் இல்லாத அளவு கூட்டம் நேற்றிரவு இருந்தது. இன்று சிறப்பு பஸ் இயக்கம் நிறுத்தப்படுகிறது. பயணிகள் திருப்பூர் திரும்ப வசதியாக நவ., 2, 3, 4 ம் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமென போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று கோவையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பொது பெட்டிகள் நிரம்பி வழிந்தன. படிக்கட்டுகளில் நின்றபடி, பெண்கள் உட்பட பயணிகள் பயணித்தனர்.
ஏற்கனவே, பெட்டிக்குள் லக்கேஜ் நிறைந்திருந்தால், பயணிகள் லக்கேஜ் இறக்கி வைக்க இடமில்லாமல், சுமையை சுமந்தபடி, 'மூச்சுத்திணறலுடன்' நின்றபடி பயணித்தனர். இரவு புறப்பட்ட கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சேரன், நீலகிரி, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கூட்டம் வழக்கத்தை விடஅதிகரித்து காணப்பட்டது.
முன்பதிவில்லா பொது பெட்டிகள் நிரம்பி வழிந்தன. டிக்கெட் முன்பதிவு செய்யாத பலர், ரயில் ஏற ஒரே நாளில் முண்டியடித்ததால், முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பார்ம் முழுதும் பயணிகள் கூட்டம் நிரம்பியிருந்ததை காண முடிந்தது.