ADDED : பிப் 16, 2024 12:44 AM

திருப்பூர்;திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த முகாமில், 23 மாணவர்களுக்கு, 1.68 கோடி ரூபாய் கல்விக்கடன் அனுமதி வழங்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி (கனரா) சார்பில், கல்விக்கடன் சிறப்பு முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. சப் கலெக்டர் சவுமியா துவக்கிவைத்தார்.
கனரா, ஸ்டேட் பாங்க், யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா உட்பட 14 வங்கிகள் பங்கேற்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியர், பெற்றோர் 200 பேர் பங்கேற்று, உரிய ஆவணங்களை இணைத்து, கல்விக்கடனுக்கான விண்ணப்பங்கள் அளித்தனர். முகாமில், 23 மாணவர்களுக்கு, மொத்தம் 1.68 கோடி ரூபாய் கல்விக்கடன் அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
தாட்கோ, மாவட்ட தொழில்மைய கடன் திட்டங்கள், பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என, வங்கியாளர்களை, சப் கலெக்டர் அறிவுறுத்தினார்.