சிறுதானிய சாகுபடிக்கு, 2 ஆயிரம் ஏக்கர் இலக்கு! 50 சதவீத மானியத்தில் இடுபொருள் தயார்
சிறுதானிய சாகுபடிக்கு, 2 ஆயிரம் ஏக்கர் இலக்கு! 50 சதவீத மானியத்தில் இடுபொருள் தயார்
UPDATED : நவ 24, 2026 10:05 PM
ADDED : நவ 24, 2026 10:02 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சிறுதானிய சாகுபடியை பரவலாக்க ‘தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் கீழ், நடப்பாண்டில் திருப்பூர் மாவட்டத்திற்கு, 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்களை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதும், பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு உற்பத்தியை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆதிசாமி அறிக்கை:கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, வரகு, குதிரைவாலி மற்றும் பனிவரகு ஆகிய சிறுதானியப் பயிர்களின் சாகுபடி இத்திட்டத்தின் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது. சாகுபடிக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்டக் கலவைகள் மற்றும் சூடோமோனாஸ் ஆகிய இடுபொருட்கள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அறுவடை மானியமாக, அதிகபட்சம், 2.5 ஏக்கர் பரப்பளவிற்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற, ஆர்வமுள்ள விவசாயிகள் ‘உழவன்’ செயலி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
