/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2.5 கி.மீ., துாரத்துக்குள் 21 வேகத்தடை; பல்லடம் அருகே வாகன ஓட்டிகள் பெரும் அவதி
/
2.5 கி.மீ., துாரத்துக்குள் 21 வேகத்தடை; பல்லடம் அருகே வாகன ஓட்டிகள் பெரும் அவதி
2.5 கி.மீ., துாரத்துக்குள் 21 வேகத்தடை; பல்லடம் அருகே வாகன ஓட்டிகள் பெரும் அவதி
2.5 கி.மீ., துாரத்துக்குள் 21 வேகத்தடை; பல்லடம் அருகே வாகன ஓட்டிகள் பெரும் அவதி
ADDED : ஜூலை 10, 2025 11:23 PM

பல்லடம்; விபத்து ஏற்படுத்தும் வகையில், 21 வேகத்தடைகள் இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு, சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள், எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில், பொள்ளாச்சி - - பல்லடம் செல்லும் நெடுஞ்சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில், சுல்தான்பேட்டை-யில் இருந்து காமநாயக்கன்பாளையம் வரையிலான, 2.5 கி.மீ., இடைவெளியில், 21 வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இப்பகுதி பொதுமக்கள், நேற்று, இவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்பகுதியினர் கூறியதாவது:
காமநாயக்கன்பாளையம் -- சுல்தான்பேட்டை ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் விதிமுறைப்படி அமைக்கப்படவில்லை. வாகனங்கள், மிகவும் கவனமாக சென்றால் மட்டுமே, விபத்து ஏற்படாமல் தப்ப முடியும். இவற்றால், வாகனங்களின் வீல்களில் உள்ள போல்டு, நட்டுகள் கழன்று, கண்ணாடிகள் உடையக்கூடிய சூழல் ஏற்படுகிறது. கனரக வாகனங்களில் 'லீப் கட்' உடைகிறது.
நோயாளிகள், கர்ப்பிணிகளை குறித்த நேரத்துக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ்கள் தடுமாறுகின்றன. எளிதில் உடையும் பொருட்கள், வேகத்தடைகளால், வாகனங்களிலேயே உடைந்து விடுகின்றன.
திடீரென பிரேக் போடுவதால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. வெறும், 2.5 கி.மீ., துாரத்துக்கு, எதற்காக, 21 வேகத்தடைகள் அமைக்கப்பட்டது என்று தெரியவில்லை. அன்றாடம் விபத்துக்களை ஏற்படுத்தி வரும் வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கலெக்டர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவு வரை புகார் மனு அளித்தும் பயனில்லை.
விபத்து ஏற்படாமல் இருக்கவே வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் எங்குமே இல்லாத வகையில், சுல்தான்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் விபத்துக்கு காரணமாக உள்ளன. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வேகத்தடைகளை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, ஆபத்தான வேகத்தடைகள் இருப்பதால், எச்சரிக்கையாக செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ்கள் வினியோகித்தனர். தொடர்ந்து, நெடுஞ்சாலை துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி, கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். வேகத்தடைக்கு எதிராக பொதுமக்கள் களமிறங்கியது சுல்தான்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.