/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2ம் மண்டல பாசனம்: 5ம் சுற்றுக்கு நீர் திறக்க உத்தரவு; இன்று முதல் ஜன., 10 வரை வழங்கல்
/
2ம் மண்டல பாசனம்: 5ம் சுற்றுக்கு நீர் திறக்க உத்தரவு; இன்று முதல் ஜன., 10 வரை வழங்கல்
2ம் மண்டல பாசனம்: 5ம் சுற்றுக்கு நீர் திறக்க உத்தரவு; இன்று முதல் ஜன., 10 வரை வழங்கல்
2ம் மண்டல பாசனம்: 5ம் சுற்றுக்கு நீர் திறக்க உத்தரவு; இன்று முதல் ஜன., 10 வரை வழங்கல்
ADDED : டிச 16, 2024 08:57 PM

உடுமலை; பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, கூடுதலாக ஒரு சுற்று நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல், ஜன., 10 வரை, 5ம் சுற்றுக்கு நீர் வழங்கப்பட உள்ளது.
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, கடந்த ஆக., 18ம் தேதி நீர் திறக்கப்பட்டது.
இதன் வாயிலாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலுார் மற்றும் திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், தாராபுரம், காங்கயம் தாலுகாவிற்குட்பட்ட, 94 ஆயிரத்து, 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலங்களுக்கு திட்ட தொகுப்பு அணைகளில் நீர்வரத்தை கணக்கிட்டு, இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, 120 நாட்களுக்கு, 4 சுற்றுக்களில், 8 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு அனுமதியளித்தது.
அதன் அடிப்படையில், நேற்று ( டிச.,16 ) வரை, நான்கு சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டது. இதில், முதல் இரண்டு சுற்றுக்கள் இடைவெளியின்றியும், மூன்றாம் சுற்றுக்கு முன், இடைவெளி விடப்பட்டது. தொடர்ந்து, 3 மற்றும் 4 ம் சுற்றுக்களுக்கு இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை, இயல்பை விட கூடுதலாக பெய்ததோடு, திட்ட தொகுப்பு அணைகளில், நீர் இருப்பு திருப்தியாக இருந்தது. இதனால், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு கூடுதலாக ஒரு சுற்று நீர் வழங்க வேண்டும், என திட்ட குழு மற்றும் பி.ஏ.பி., விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, கூடுதல் சுற்று நீர் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யபட்டது.
அதன் அடிப்படையில், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, ஆக.,18 முதல், டிச., 16 வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், இன்று முதல், வரும் ஜன., 10 வரை, கூடுதலாக ஒரு சுற்றுக்கு, 2 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் திறக்க நேற்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் வாயிலாக, இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, 5 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட உள்ளது. கடந்த, 2019க்கு பின், பி.ஏ.பி.,மண்டல பாசன நிலங்களுக்கு, 5 சுற்றுக்கள் நடப்பாண்டு நீர் வழங்கப்படுகிறது.
இதே போல், அடுத்து துவங்க உள்ள, மூன்றாம் மண்டல பாசனத்திற்கும், 5 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'பருவ மழை மற்றும் அணை நீர் இருப்பை கருத்தில் கொண்டு, கூடுதலாக ஒரு சுற்று நீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில், 5ம் சுற்றுக்கு, 2 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் வழங்க நேற்று அரசு உத்தரவிட்டுள்ளது. திருமூர்த்தி அணை நீர் இருப்பும் திருப்தியாக உள்ளதால், தொடர்ந்து, 5ம் சுற்றுக்கு நீர் வழங்கப்படுகிறது,' என்றனர்.
அணை நீர்மட்டம்
திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள, 60 அடியில், நேற்று காலை நிலவரப்படி, 52.63 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,329.63 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 943 கனஅடி நீர் வரத்தும், அணையிலிருந்து 1,003 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்தது.