/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
3 பேர் கொலை வழக்கு; கைதியிடம் விசாரணை
/
3 பேர் கொலை வழக்கு; கைதியிடம் விசாரணை
ADDED : ஏப் 18, 2025 11:43 PM

பல்லடம்: பல்லடம் அருகே மூவர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக கோவை சிறை கைதியிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.
பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமத்தில், கடந்த ஆண்டு நவ., மாதம், பண்ணை வீட்டில், தெய்வசிகாமணி, அவரது மனைவி அமலாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோர் கொடூரமாக கொல்லப்பட்டனர். அமலாத்தாள் அணிந்திருந்த ஆறு பவுன் நகை, செந்தில்குமாரின் மொபைல் போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
கொலை சம்பவம் தொடர்பான எவ்வித தடயமும், 'சிசிடிவி' காட்சிகளும் கிடைக்காததால், முன்னாள் குற்றவாளிகள், சந்தேகப்படும்படியான நபர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது. விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. எஸ்.பி., ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார், கடந்த மார்ச் மாதம் முதல் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூரை சேர்ந்த 45 வயது நபர் ஒருவர், திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளார். கடந்த ஆண்டு, பல்லடம் அருகே பணிக்கம்பட்டி கிராமத்தில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, பல்லடம் குற்றப்பிரிவு போலீசார் அவரை அழைத்து வந்திருந்தனர். அத்துடன் சேமலைக்கவுண்டபாளையம் கொலை சம்பவத்தில் இவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் அவரிடம் விசாரணையை துவக்கினர்.
நேற்று முன்தினம் இரவு, பல்லடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துவரப்பட்ட இவரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று காலை முதல் விசாரணை மேற்கொண்டனர்.
இவர் மீது, தஞ்சாவூர், பல்லடம் பகுதியில் சில திருட்டு வழக்குகள் உள்ளன. மூவர் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.