/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரே கிராமத்தில் சிக்கிய 3 வி.ஏ.ஓ.க்கள்
/
ஒரே கிராமத்தில் சிக்கிய 3 வி.ஏ.ஓ.க்கள்
ADDED : நவ 01, 2025 12:27 AM
பொங்கலுார்: லஞ்சம் வாங்கியதால் மூன்று வி.ஏ.ஓ.,க்களை துணிந்து பிடித்துக்கொடுத்து, சந்தவநாயக்கன்பாளையம் கிராமம் தலைநிமிர்ந்து நிற்கிறது.
சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரனிடம், 750 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் காட்டூர் வி.ஏ.ஓ., ஆக இருந்த செல்லத்துரை, 1999ல் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்கினார்.
அதே ஊரைச் சேர்ந்த விவசாயி பிரதீஸ்வரனிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் 2019-ல் காட்டூர் வி.ஏ.ஓ., ஆக இருந்த சுரேஷ்குமார், தண்டல்காரர் ஜெயசீலன் ஆகியோர், 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கினர். நேற்று முன்தினம் காட்டூர் வி.ஏ.ஓ., ஜெயக்குமார் சந்தவ நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தியிடம் பட்டா மாறுதலுக்காக,17 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி, நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த, 2009ல் கொடுவாய் வருவாய் ஆய்வாளராக இருந்த முருகேசன் ராமம்பாளையத்தை சேர்ந்த விவசாயி வீரக்குமாரிடம், 600 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி சிறை சென்றார். இதே போல பொங்கலுார் வருவாய் ஆய்வாளராக இருந்த செந்தில்குமார், 2023ல் லாரி உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி சிறை சென்றார். பொங்கலுார் பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து பொறி வைத்து பிடிப்பதால் வருவாய்த் துறையினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் லஞ்ச வழக்கில் சிக்கிய வி.ஏ.ஓ., ஜெயக்குமார் உட்பட இதுவரை மூன்று பேர் காட்டூர் கிராமத்தில் வி.ஏ.ஓ., ஆக பணிபுரிந்த போது லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கி உள்ளனர்.
சிக்கிய மூவருமே சந்தவநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்களால் பொறிவைத்து பிடிக்கப்பட்டுள்ளனர். அதுபோக பொங்கலுார் ஒன்றியத்தில் மட்டும்இதுவரை ஐந்து பேர் லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கி உள்ளனர்.

