/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னும் குப்பை கொட்டுவதா?: விவசாயிகள் குமுறல்
/
கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னும் குப்பை கொட்டுவதா?: விவசாயிகள் குமுறல்
கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னும் குப்பை கொட்டுவதா?: விவசாயிகள் குமுறல்
கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னும் குப்பை கொட்டுவதா?: விவசாயிகள் குமுறல்
ADDED : நவ 01, 2025 12:28 AM
திருப்பூர்: 'இடுவாயில் குப்பை கொட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய பின்னும்,மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட முயற்சிப்பது தவறான முன்னுதாரணம்' என்று விவசாயிகள் குறைகேட்புக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், திருப்பூர், அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி தாலுகா பகுதி விவசாயிகள் பங்கேற்று, வேளாண் பிரச்னைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி பேசியதாவது:
திருப்பூர் மாநகர பகுதி களில் சேகரிக்கப்படும் குப்பைகளை, இடுவாயில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இடுவாய், கரைப்புதுார், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம் கிராமங்களில், விவசாயிகள், பொதுமக்கள், கடை அடைப்பு போராட்டம் நடத்தினர்.
இனாம் ஒழிப்பு சட்டப்படி, 1968ல், இனாம் ஒழிப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக, 70 ஏக்கர் நிலம், ரயத்துவரி பட்டாவாக வழங்கப்பட்டது.
இனாம் நிலம் ஒழிப்பு சட்டப்படி, விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டிய நிலம், திருப்பூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்களுக்கு பயன்படும் என எண்ணியதால், பொதுமக்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அந்நிலத்தின் ஒருபகுதியில், மாநகராட்சி நிர்வாகம், சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவியது, மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. மக்கள் பங்களிப்புடன் மாநகராட்சி சிறுவர் பூங்கா, மூங்கில் பூங்கா அமைத்தது வரவேற்கத்தக்கது.
ஆனால் தற்போது அதே இடத்தில், மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்கிறது.
இடுவாயில் குப்பை கொட்டக்கூடாது என கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும், மாநகராட்சி நிர்வாகம் அங்கு குப்பை கொட்ட முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாகி விடும்.
இனாம் நிலம், ரயத்துவாரி பட்டா, குப்பை கொட்டுவதற்காக வழங்கப்படவில்லை. இடுவாயில் விவசாய நிலங்கள் அதிக பரப்பில் உள்ளன. பி.ஏ.பி., பாசன நிலங்களும் உள்ளன.
மாநகராட்சி பகுதிகளிலிருந்து தினம் ஏராளமான லாரிகளில் குப்பை கழிவுகளை கொண்டுவந்து கொட்டும்போது, சுகாதார கேடு, போக்குவரத்து நெரிசல் ஏற்படும். விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி, குப்பை கொட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, பொன்னுசாமி பேசினார்.
அத்திக்கடவு திட்டத்துக்கு நிலம்: இழப்பீடு வழங்க வலியுறுத்தல்: திருப்பூர்: கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட குழு செயலாளர் குமார் பேசியதாவது:
அத்திக்கடவு திட்டத்தில் நீரேற்றம் செய்யாததால், திருப்பூர் வடக்கு ஒன்றியம் பகுதி மற்றும் அவிநாசியில் சில இடங்களில், குளம், குட்டைகள் நிரம்பவில்லை. இதுதொடர்பாக முந்தைய குறைகேட்பு கூட்டத்தில் தெரிவித்தும் பயனில்லை. குளம், குட்டைகளின் கொள்ளளவில், 10 முதல் 20 சதவீதம் மட்டுமே நீரேற்றப்பட்டுள்ளது.
நீர் நிரப்பப்படாத குளம், குட்டைகளுக்கு முன்னுரிமை அளித்து, உடனடியாக நீர் வழங்க வேண்டும். அத்திக்கடவு திட்ட குழாய் பதிப்பதற்காக பட்டா நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீடு கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே, பி.ஏ.பி.,க்கு நிலம் வழங்கிய விவசாயிகள் இழப்பீட்டுக்காக போராடி வருகின்றனர். அத்திக்கடவு திட்டத்திலும் அத்தகைய நிலையே ஏற்படலாம் என்பதாலும், ஏற்கமுடியாத நிபந்தனைகளாலும், ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட விவசாயிகள் பயப்படுகின்றனர்.
விவசாயிகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்து, நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்.

