30 சவரன் நகை கொள்ளை
திருப்பூர் அருகே வாவிபாளையம் ஜி.கே., மாடர்ன் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் தயானந்தன், 32, தனியார் பள்ளி ஆசிரியர். மனைவி, மகன், மகளுடன் வசித்துவந்தார். கடந்த, 10ம் தேதி தயானந்தன், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்றார். 11ம் தேதி இரவு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.பீரோ உடைக்கப்பட்டு, வளையல், செயின், நெக்லஸ், காயின், மோதிரம் என, 30 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். முன்னதாக, உதவி கமிஷனர் நல்லசிவம், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கஞ்சா செடி வளர்ப்பு; 2 பேர் கைது
குண்டடம், தொட்டியந்துறையில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு வீடுகளை கண்காணித்தனர். மேற்கு வங்க மாநிலம், தரக் முண்டல், 33, அனுப் சர்தார், 22 ஆகியோரை கைது செய்த போலீசார், வளர்த்த, 2 கிலோ எடையுள்ள, இரு கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
வீட்டில் 140 கிலோ குட்கா பறிமுதல்
குன்னத்துார், ஒடத்தலாம்பதி, ரங்கா நகரில் ரமேஷ்பாண்டியன், 38 என்பவர் வீட்டில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசாருடன் அங்கு சோதனை செய்த போது, ரமேஷ்பாண்டியனை கைது செய்து, 140 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
கல்லுாரி மாணவர் தற்கொலை
காங்கயம், வீரணம்பாளையம், ராம்நகரை சேர்ந்தவர் நிஷாந்த், 20. காங்கயம் அருகேயுள்ள முள்ளிபுரம் அரசு கலை கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக நிஷாந்த் மனமுடைந்து காணப்பட்டார். வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர் அனைவரும் துாங்கி கொண்டிருந்த நிலையில், நிஷாந்த் துாக்குமாட்டி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சீட்டாட்டம்; ஐந்து பேர் கைது
வெள்ளகோவில் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். கச்சேரி வலசுவில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபு, 40, நடராஜன், 52, பாலசுப்ரமணியம், 42, சுரேஷ்குமார், 40 மற்றும் காந்தி, 57 என, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.