/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவொளி நகர் மக்களின் 32 ஆண்டு 'தவம்'
/
அறிவொளி நகர் மக்களின் 32 ஆண்டு 'தவம்'
ADDED : ஆக 22, 2025 11:53 PM
கடந்த 32 ஆண்டுகளாக பட்டாவுக்காக மேற்கொண்டு வரும் போராட்டம், வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர், அறிவொளி நகர் மக்கள்.
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது, அறிவொளி நகர்; நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சியின் மொத்த மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர் இங்கு வசிக்கின்றனர்.
உடைமைகளை இழந்தபோது
அறிவொளி நகரே அடைக்கலம்
கடந்த, 1993ல், திருப்பூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, வீடு, உடைமைகளை இழந்த, 1,220 குடும்பத்தினர் அறிவொளி நகரில் குடியமர்த்தப்பட்டனர். ரத்தினசாமி நகர், அம்பேத்கர் நகர், ஜே.ஜே., நகர், நரிக்குறவர் காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும், 540க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும், பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு குடியமர்த்தப்பட்டனர். மேய்ச்சல் புறம்போக்கு நிலமான இப்பகுதியில் வசிக்க, 6 மாத குத்தகை பட்டா வழங்கப்பட்டது.
அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் இப்பகுதியை கண்டுகொள்ளாததால், கடந்த, 32 ஆண்டுகளாக இங்கு வசிக்கும் மக்கள் பட்டா இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். நீண்ட காலமாக பட்டா வழங்கப்படாததால், சிலர், நிலத்தை விற்பனை செய்துவிட்டு இங்கிருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தனர். தற்பாது 1,555 குடும்பத்தினர் பட்டா இன்றி இங்கு வசித்து வருகின்றனர். பட்டா இல்லாமல், கடன் வாங்கவும், குழந்தைகளை படிக்க வைக்கவும் வழியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். பட்டா வழங்க வலியுறுத்தி இப்பகுதியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குறுதிகள் மாறாது...
ஆனால், நிறைவேறாது
கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதாகவும், அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறியும் பட்டா வழங்குவதை கிடப்பில் போட்டு வந்தனர். இதற்கு ஏற்ப ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளிப்பதும், பதவிக்கு வந்த பின், வழக்கம்போல் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுவதும், 32 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
கடந்த காலங்களில் இங்கு குடியிருப்பவர்களுக்கு வீட்டு வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், சமீப நாட்களாக அதுவும் நிறுத்தப்பட்டது. இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், இடத்துக்கு மாற்று இடம் வழங்கத் தேவையில்லை; விரைவில், 1,555 குடும்பங்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தாசில்தார் உறுதி அளித்தார். பட்டா வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அறிவொளி நகருக்கே நேரில் வந்து, பொதுமக்களை சந்தித்து தெளிவுபடுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், தாசில்தாரின் வருகையை எதிர்பார்த்து, 1,555 குடும்பங்களும் காத்திருக்கின்றன.