/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
4 காலம் மட்டும் ---- சர்க்கரை, ரத்த அழுத்தம் சீராக இருக்க என்ன வழி?
/
4 காலம் மட்டும் ---- சர்க்கரை, ரத்த அழுத்தம் சீராக இருக்க என்ன வழி?
4 காலம் மட்டும் ---- சர்க்கரை, ரத்த அழுத்தம் சீராக இருக்க என்ன வழி?
4 காலம் மட்டும் ---- சர்க்கரை, ரத்த அழுத்தம் சீராக இருக்க என்ன வழி?
ADDED : ஆக 10, 2025 11:02 PM

திருப்பூர்,; 'சரியான உணவு பழக்கம், நடைப்பயிற்சி, மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொண்டால், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஆயுள் முழுவதும் சீராக வைத்திருக்க முடியும்' என, கருத்தரங்கில் மருத்துவர்கள் பேசினர்.
திருப்பூர், சின்ன தோட்டத்தில், 'அச்சமில்லை - அச்சமில்லை' என்ற தலைப்பில், சர்க்கரை நோய் குறித்த இலவசக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. ஓய்வு பெற்ற அரசு தலைமை மருத்துவரும், நீரிழிவு நோய் நிபுணருமான நசீர்தீன்; தீவிர சிகிச்சை மருத்துவ நிபுணர் சையது முகமது புகாரி ஆகியோர் பேசியதாவது:
கணையம், இன்சுலினை சுரக்கிறது. உணவுப்பொருளில் உள்ள கார்போஹைட்ரேட், இன்சுலினால் குளுக்கோசாக மாற்றப்பட்டு, செல்களுக்குள் அனுப்பப்படுகிறது. முற்றிலும் இன்சுலின் சுரக்காதது, டைப் -1 சர்க்கரை நோய்; இது பெரும்பாலும், குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
இன்சுலின் சுரந்தும், செல்லுக்கு சென்று சேராத நிலைதான் டைப் 2 வகை சர்க்கரை நோய்; பெரும்பாலானோர், இவ்வகை நோயாளிகளாகவே உள்ளனர். ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரைதான், கொழுப்பாக மாற்றப்பட்டு, ரத்தக்குழாய்களிலும் வேறு இடங்களிலும் சேகரமாகிறது. இதுவே, ரத்த குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, இதய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோயா?
பயம் வேண்டாம்
அதற்காக சர்க்கரை நோயை கண்டு பயப்பட தேவையில்லை. சரியான உணவு பழக்கம், நடைப்பயிற்சி, மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொண்டால், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஆயுள் முழுவதும் சீராக வைத்திருக்க முடியும். உண்ணும் உணவில், காய்கறி, கீரை வகைகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். நிலத்துக்கு கீழ் விளையும் காய்கறிகளை தவிர்ப்பது நல்லது.
மாத்திரைகளால்
சிறுநீரகம் பாதிக்குமா?
சர்க்கரை நோய்க்கு வழங்கப்படும் மாத்திரைகளால் சிறுநீரகம் பாதிக்கும் என பரப்பப்படும் தகவல்கள் தவறானவை. அவற்றை நம்பி, தொடர் சிகிச்சைகளை கைவிடக்கூடாது.
சர்க்கரை நோயாளிகள் ஏராளமானோர், மருத்துவர் பரிந்துரைக்கும் மருத்திரை, இன்சுலின் ஊசிகளை எடுத்துக்கொண்டு, அதிக வயது வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். முன்னரே கண்டறிந்து உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதன்மூலம், சர்க்கரையை கண்டு நாம் அச்சப்பட தேவையில்லை.
தேவையான
பரிசோதனை அவசியம்
மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரையையும், அதே அளவில் மாதக்கணக்கில் உட்கொள்வது சரியாகாது. சீரான இடைவெளியில் தேவையான பரிசோதனைகள் செய்து, மருத்துவரை அணுகவேண்டும். நோயின் தன்மைக்கு ஏற்ப, மருத்துவர், மாத்திரை அளவை குறைத்து அல்லது சற்று அதிகரித்து கொடுப்பார்; அவற்றை உட்கொள்ளவேண்டும். முன்னரே கண்டறிந்து உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதன்மூலம், நம்மை பாதுகாத்துக்கொண்டு, ஆரோக்கியமாக வாழலாம்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.
---
டாக்டர் நசீர்தீன்