ADDED : செப் 27, 2024 12:36 AM

கொங்கு மண்டலத்தின் ஒரு அங்கமாக விளங்கும் திருப்பூர் கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாகவும் திகழ்கிறது. 'ஆன்மிக சுற்றுலாவாக மட்டும், ஆண்டுக்கு, 40 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்' என்கிறது, சுற்றுலாத்துறை.
ஆடை உற்பத்தி தொழில், விசைத்தறி, விவசாயம், தேங்காய் எண்ணெய் தயாரிப்பு, கோழிப்பண்ணை என, பலதரப்பட்ட தொழில் நிறைந்த திருப்பூர், பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது. கிராமங்களில் உள்ள பழமையான கோவிலில் உள்ள கல்வெட்டுகள், பழங்கால ஆட்சி முறையை நினைவுப்படுத்துகின்றன. 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகத்தின் சின்னங்கள், திருப்பூரில் நிரம்ப இருக்கின்றன.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதர் சுவாமி கோவில், உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், மானுபட்டி ஏழுமலையான் கோவில், காங்கயம் சிவன்மலை கோவில், திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவில், சாமாளாபுரம் வாழைத் தோட்டத்து அம்மன் கோவில், தாராபுரம் அனுமந்தராயர் சுவாமி கோவில் என, பழம் பெருமை வாய்ந்த, தேவாரம் பாடல் பெற்ற கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாகவும், இம்மாவட்டம் விளங்குகிறது.
''கொரோனாவுக்கு பின், கோவில்களுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த, 2023-24ல், 40 லட்சம் பேர் கோவில்களுக்கு வந்து சென்றுள்ளனர்,'' என்கிறார் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார்.
கோவிலில் சுற்றுலா விழா
உலக சுற்றுலா தினமான இன்று, மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், காலை, 9:30 மணிக்கு, உடுமலை அரசு கல்லுாரியில் சுற்றுலா கருத்தரங்கம் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. பின், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் துாய்மைப்பணி மற்றும் கலை நிகழ்ச்சி; அங்குள்ள யோகா கல்லுாரியில் சுற்றுலா கருத்தரங்கம் மற்றும் யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.